தீராக்காதல் படத்துக்காக திருப்பதி மலைக்கு இயக்குநர் ரோஹினுடன் நடந்து சென்றதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 


தீரா காதல்:


அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களின் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தீரா காதல்', இந்தத் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை, வடபழனியில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: “எல்லா கதைகள் பின்னாடியும் ஒரு கதை இருக்கும்‌. தீராக்காதல் கதைக்குப் பின் இயக்குநர் ரோஹினுடனான கதை இருக்கிறது.  4, 5 கதைகளை லைகா தமிழ் குமரனுக்கு அனுப்பினேன். அவருக்கு பிடித்தது ரோஹினின் தீராக்காதல் கதை.


திருப்பதிக்கு நடைபயணம்:


அப்போது தலைப்பு வைக்கவில்லை. தமிழ் குமரனுக்கு கதை பிடித்து, நான் ரோஹின் மூவரும் தொலைபேசியில் பேசும் போது ரோஹினை தமிழ் குமரன் புகழ்ந்து தள்ளிவிட்டார். இந்தப் படம் லைகா தயாரிப்பில் வேண்டும் என்பதால் நானும் ரோஹினும் திருப்பதி மலைக்கு நடந்து போனோம்.


இந்தப் படம் ஓகே ஆகிவிட வேண்டும் என்று சென்றோம். அப்போது தமிழ் குமரன் இந்தக் கதை பண்ணலாம் என்று அழைப்பு விடுத்தார். ரோஹின், படம் முடிந்து இரண்டாவது முறையும் திருப்பதி நடந்தார். காதல் படங்களில் நான் நிறைய நடித்ததில்லை. இந்தப் படத்தில் நடித்தது பெரிய விசயம். ஜெய் தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ரோஹின் உறுதியாக இருந்தார்.  நடிகர் அம்ஜத் இந்தப் படத்தில் என்னுடையகணவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்றார்.


ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நன்றி:


தொடர்ந்து நடிகர் ஜெய்‌ மேடையில் பேசியதாவது, “லைகா தயாரிப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசையாக இருந்தது. அது நடந்து விட்டது. அதற்கு ஐஸ்வர்யாவுக்கு நன்றி. 'அதே கண்கள்' திரைப்படம் 4, 5 முறை பார்த்து விட்டேன். இந்த இயக்குநர் ரோஹினின் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. 


வேகமாக நகரும் காலக்கட்டத்தில் இந்த மாதிரி படத்தில் நடித்ததற்கு சந்தோசம். படக்குழுவுக்கு நன்றி. அடுத்து அஜித்தை வைத்து ரோஹின் படம் பண்ணப்போவதாக நியூஸ் பேப்பரில் படித்தேன். அந்தப் படத்தில் எனக்கு வில்லன் ரோலாவது கொடுங்கள் ரோஹின்.  ஐஸ்வர்யாவுடன் படம் பண்ண வேண்டும் என்று நினைத்ததில் இந்த படம் அமைந்துள்ளது” எனப் பேசினார்.


 



முக்கோணக் காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள  தீராக்காதல் திரைப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.