தமிழ், தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


காலமானார் சரத்பாபு:


71 வயதான சரத்பாபுவின் உடல் உறுப்புகள் செயலிழந்து நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்த நிலையில், அவரது உடல் முன்னதாக சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு கிண்டி, தொழிற்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. டோலிவுட்டில் முதலில் அறிமுகமான சரத்பாபுவுக்கு முதலில் சரியான திரைப்படங்கள் அமையாத நிலையில், கோலிவுட்டில் 1977ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் பட்டினப் பிரவேசம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.


நிழல் நிஜமாகிறது படம் இவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்த நிலையில், ரஜினியுடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களும் நடிகர் கமஹாசனுடன் சலங்கை ஒலி, மரோ சரித்ரா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து, கோலிவுட் ஸ்டார்களின் நண்பன் நடிகர் என்றால் இவர் தான் என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.


ஜெயலலிதாவிற்கு ஹீரோ:


இந்நிலையில், சரத்பாபு பற்றிய பல யசுவாரஸ்யத் தகவல்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜோடி சேர்ந்த இறுதி ஹீரோ நடிகர் சரத்பாபு தான் எனும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


1980ஆம் ஆண்டு பி.லெனின் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான ’நதியைத் தேடி வந்த கடல்’ எனும் படத்தில் 1980ஆம் ஆண்டு நடிகர் சரத்பாபுவுடன் இணைந்து ஜெயலலிதா நடித்திருந்தார்.


தமிழில் இறுதியாக முன்னணி நடிகையாக ஜெயலலிதா நடித்தத் திரைப்படம் இதுவே. இதன் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஜெயலலிதா சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, 80களின் மத்தியில் முழுமையாக அரசியலில் நுழைந்தார்.




நந்தி விருது:


மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தான் முதலில் நடிக்கவிருந்ததாகவும், பின் சந்தர்ப்ப சூழலால் சரத்பாபு ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்பாபு, தொலைக்காட்சித் தொடர்களிலும் கலக்கியுள்ளார். 


இறுதியாக டோலிவுட்டில் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்திலும், தமிழில் டாக்டர் படத்திலும் சரத்பாபு நடித்திருந்தார்.  தன் நடிப்புத் திறமைக்காக தெலுங்கில் மூன்று முறை நந்தி விருதுகளை வென்றுள்ள சரத்பாபு, தமிழ்நாடு அரசின் மாநில விருதை ஒரு முறை வென்றுள்ளார்.


முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் சரத்பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நான் நடிகன் ஆவதற்கு முன்பாகவே சரத் பாபுவை எனக்குத் தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார். சரத்பாபு கோபமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. அனைவருக்கும் தெரியும் நான் அவருடன் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். என் மீது அளவுகடந்த அன்பு பிரியம் கொண்டவர்.


நான் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து எப்போதுமே வருத்தப்படுவார். அவரு முன்னாடி நான் சிகரெட்டே பிடிக்க மாட்டேன். ஆனால், அண்ணாமலையில் ஒரு பெரிய வசனம், அவரு வீட்ல வந்து சவால் விடும் டயலாக். 10, 12 டேக் ஆகிருச்சு ஆனாலும் ஒகே ஆகல. அப்ப சரத் பாபு பக்கத்தில் வந்து, இந்த சிகரெட் பிடினு சொல்லி வரே பத்த வைச்சார். அந்த சிகரெட் பிடிச்சதுக்கு அப்றம் அந்த டேக் ஓகே ஆச்சு. ரொம்ப நல்ல மனிதர்” எனப் பேசியுள்ளார்.