விடுதலை படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபரீதம்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ள வெற்றிமாறன் அசுரன் படத்திற்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘விடுதலை’. சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேற்று, சென்னை வண்டலூர் அருகே விடுதலை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை படக்குழுவினர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சுரேஷ் உயிரிழந்து விட்டார். இதனால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாபா ட்ரெய்லர் ரிலீஸானது
வெளியான சமயத்தில் மோசமான தோல்வியை தழுவிய பாபா திரைப்படம், மீண்டும் புதுப்பொலிவுடன் திரையில் வெளியிடப்படவுள்ளது. சில தினங்களுக்கு முன், இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இதைத்தொடர்ந்து, இன்று மற்றொரு போஸ்டர் வெளியாகியிருந்தது. அதில், இன்று ஆறு மணிக்கு பாபா படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்ற தகவல் இடம் பெற்றது.
அதன்படி, படக்குழுவினர் சொன்னபடியே, 6 மணிக்கு பாபா பட புது வெர்ஷனின் ட்ரெய்லர் ரஜினிகாந்து வெளியிட்டார். ஆனால் அந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், பெரிதாக ஒன்றுமில்லையே என்ற கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்த நிலையில், ரஜினி சில நிமிடங்களில் அந்தப்பதிவை டெலீட் செய்தார். அடுத்த சில நொடிகளில் பாபா படத்தின் புதிய டிஜிட்டல் வெர்ஷன் ட்ரெய்லர் ரஜினி ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றது. இந்த ட்ரெய்லர் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று ரிலீஸாக போகும் தீ தளபதி
தளபதி விஜய் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனைக் கொண்டாடும் வகையில், “ 30 வருட விஜயின் சினிமா வாழ்க்கையை கொண்டாடும் நேரமிது.. வாரிசு அப்டேட் வெளியாகும்” என தயாரிப்புக் குழுவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வாரிசு படத்தின் அப்டேட்டும் வெளியானது.
இந்த அப்டேட்டில், வாரிசு படத்தின் இரண்டாம் பாடலாக “தீ தளபதி” என்ற பாடல் வரும் இன்று (டிசம்பர் 4 ஆம் தேதி - மாலை 4 மணிக்கு) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பின்னணியில் செஸ் போர்ட்டில் இடம் பெறும் ராஜா காயின் தீ பிடித்து எரிவதுபோல போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த பாடல் குறித்த இன்னொரு செய்தியையும், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பாடலை, நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சொல்கிறேன் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு பிரச்சார படம்தான்'..
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் நடுவரும் இஸ்ரேல் இயக்குநருமான நடவ் லாபிட், பிரச்சார நோக்குடன் 'தி காஷ்மீர் பைல்ஸ்' எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது ஒரு கீழ்த்தரமான படம் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தது பெரும் விவாத்தை கிளப்பியது.
இந்நிலையில், நடுவர் பட்டியலில் இடம்பெற்ற மற்ற நடுவர்களும் லாபிட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். நடுவர்கள் ஜின்கோ கோடோ, பாஸ்கேல் சாவன்ஸ் மற்றும் ஜேவியர் அங்குலோ பார்டுரன் ஆகியோர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபிட் தெரிவித்த கருத்துக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ளனர்.
எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஏமாற்றம் :
மகத்தான சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்ட மற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டாரன் அரோனோஃப்ஸ்கி, சாரா பாலி மற்றும் ஜினா பிரின்ஸ்-பிளைத்வுட் ஆகியோர் மத்தியில் ராஜமௌலியின் வெற்றி பலரை ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது மூலம் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
மறுபக்கம் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் எழுத்தாளர் மற்றும் ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 2022ம் ஆண்டு முழுவதும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கொண்டாடி இப்படம் ஆஸ்கார் விருதை நிச்சயமாக வெல்லும் என பல உரையாடல்களில் ஊக்குவிக்க மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த எனக்கு லாஸ்ட் ஃபிலிம் ஷோ (செல்லோ ஷோ) ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது என மிகுந்த மனவேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஆர்ஆர்ஆர் படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்.