பெரும் வரவேற்பை பெற்ற நெட்ஃபிக்ஸின் ஃபேன்டஸி டிராமாவான 'தி விட்சர்' வெப் சீரிஸின் சீசன் 2 இல் ஏன் செக்ஸ் மற்றும் நிர்வாணம் குறைவாக உள்ளது என்று தி விட்சர் தொடரை உருவாக்கிய லாரன் ஷ்மிட் ஹிஸ்ரிச் பேசி வருகிறார். வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) அன்று சீசன் 2 வெளியாவதற்கு முன்னதாக பேசிய ஹிஸ்ரிச், இந்த சீசனில் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எடுத்துரைத்தார். இந்த முறை செக்ஸ் மற்றும் நிர்வாணத்தை கட்டுப்படுத்தும் முடிவு வேண்டுமென்றே எடுக்கப்பட்டதா அல்லது அது கதையின் ஒரு பகுதியாக இருந்ததா என்று கேட்டபோது, ஷ்மிட் ஹிஸ்ரிச் இதன் கதையும் காலமும் அப்படி என்றும் கதையின் ஒரு பகுதி என்றும் அது எவ்வாறு உருவானது என்றும் விளக்கினார்.
"ஒரு திரைப்படத்தில் எல்லாமே கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும். பாலியல், நிர்வாணம், வன்முறை மற்றும் இவை அனைத்தையும் பற்றி நான் அதே போலத்தான் பார்க்கிறேன், அவை கதை சார்ந்ததாக இருக்க வேண்டும்," என்று அவர் விளக்கினார். "பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்ய அந்த விஷயங்களைப் பயன்படுத்துவது ஒரு எழுத்தாளருக்கு ஒரு குறிப்பிட்ட காட்சியில் கவனத்தை ஈர்ப்பதற்கு மிகவும் எளிதான வழி என்று நான் நினைக்கிறேன். காட்சியை சுவாரஸ்யமாக்க உங்கள் பின்னால் யாராவது உடலுறவு கொள்ள வேண்டும் என்றால், நான் என் வேலையைச் செய்யவில்லை என்று அர்த்தம். ஒரு காட்சியில் பேசுபவர் மீது பார்வையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன்." என்றார்.
தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான ஷ்மிட் ஹிஸ்ரிச் தி விட்ச்சரின் சீசன் இரண்டில், கதை எந்த வகையிலும் காதல் உறவுகளைப் பற்றியது அல்ல என்று விளக்கினார். "கதை ஒரு குடும்பத்தின் பரிணாமத்தைப் பற்றியது. அதனால் படத்தில் நிறைய உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகள் வைக்க வேண்டிய அவசியம் வரவில்லை. நிறைய நிர்வாணத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை. தொடரைக் காணும்போது நீங்கள் அதை முழுவதுமாக உணர்வீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் கதைகள் என்னவென்று யோசிப்பதற்கு முன்பு, செக்ஸ், நியூடிட்டி எங்கே இருக்கும் என்று தேடுகிறீர்கள்? படத்தில் வைத்திருந்தாலும் அது தேவையற்றதாக இருந்திருக்கும், ஏனென்றால் நாங்கள் அதை கவர்ச்சியாக இருக்க அல்லது மக்கள் இதுகுறித்து பேசுவதற்காக அதை அங்கு வைத்திருப்போம். அதில் எனக்கு உடன்பாடு இல்லை." என்று தீர்க்கமாக கூறினார். Witcher சீசன்கள் 1 மற்றும் 2 இப்போது Netflix இல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.