பெண் என்றாலே, ஒவ்வொரு நாளும் ஆண்களின் பலவிதமான கண் பார்வையை கடந்தே ஆகவேண்டும். பல நேரங்களில் அருவெறுப்பான பார்வைகளால், நரக வேதனையை சந்திக்க வேண்டிய தருணங்களும் உண்டு. அதிலும் பேரழகு வாய்க்கப்பெற்ற பெண் என்றால் கேட்கவேண்டியதேயில்லை. பார்க்கிறவர்கள் அத்தனைபேரும் பார்வையில் 'படுக்கை விண்ணப்பம்' போடாமல் போகவேமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் நடிகை சில்க் சுமிதா போன்றோரின் வாழ்க்கை நிம்மதியாகவா இருந்திருக்கும்..? அதனை அப்படியே நிரூபித்துவிட்டது இளவயதிலேயே அவரை தேடிவந்த மர்மச்சாவு.1979ல் சிவக்குமார்- சரிதா நடித்த வண்டிச்சக்கரம் படம் உருவானபோது, விஜயலட்சுமி என்ற ஆந்திர வைரத்தை கதை வசன கர்த்தா வினுச்சக்ரவர்த்திதான் சுமிதா என பெயரிட்டு அறிமுகம் செய்துவைத்தார். சாரயம் விற்கும் சில்க் என்ற பாத்திரம்தான், சுமிதாவிடையது. வா பாளையம் வா பாளையம்.. என்று நடிகர் சாமிக்கண்ணு கூவியபடியே," வா மச்சான் வா வண்ணாரபேட்டை" என்று சில்க்கை வர்ணித்து பாடும் பாடல் தியேட்டர்களில் ரிபீட் முறையில் ஆடியன்சை வரவழைத்து அந்த படத்தை தாறுமாறாக ஓடச்செய்தது. 




இன்றும் நமக்கு நினைவில் இருக்கிறது ரிலீசில் வந்தவாசியில் பார்த்தபோதும் சரி, இரண்டு ஆண்டுகள் கழித்து காஞ்சிபுரத்தில் பார்த்தபோதும் சரி தியேட்டர் அதகளப்பட்ட விதம்..இன்னொரு பக்கம் அந்தப் பாடலுக்காவே வந்திருந்த ரசிகர்கள் (அப்போதெல்லாம் இப்படி ஒரே ஒரு பாடலுக்காக வரும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க,ஒன்ஸ்மோர் போட்டு திருப்திப்படுத்தி வெளியே அனுப்புவார்கள்)அப்படிப்பட்ட சில்க், பிரேத பரிசோதனைக்கான சடலமாய் சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு ஓலைப்பாயில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தார் என போட்டோகிராபர் சொன்னதையும் அதை வைத்து செய்தியாக எழுதுவோம் என்றும் பின்னாளில் நினைத்துக்கூட நம்மால் பார்க்கமுடியவில்லை சரி, விட்ட இடத்தில் தொடருவோம். மூன்றாம் பிறையில் கமலோடு ஆடிய பொன்மேனி உருகுதே, சகலகலாவல்லவனில், நேத்து ராத்திரியெம்மா, பாயும்புலியில் ரஜினியுடன் ஆடி மாசம் காத்தடிக்க போன்ற பாடல்கள் சில்க் எங்கே கொண்டுபோயின. முன்னணி நடிகர்களாக இருந்தாலும் கூடுதல் வசூலுக்காக சில்க்குடன் ஒரு பாடலுக்காவது ஆடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர் என்பது தமிழ் சினிமாவின் விசித்திரம். இங்குமட்டுமல்ல, தென்னிந்திய திரைப்படங்கள் அத்தனையிலும் சில்க் ஆட்டம், பேயாட்டம் போட்டது. உறங்கினால் சில்க்கோடு உறங்க வேண்டும், அல்லது உறங்கியவன் காலைத்தொட்டாவது கும்பிடவேண்டும் என்று இளவட்டங்கள் பேசும் அளவுக்கு சில்க் சுமிதாவின் கவர்ச்சி வீச்சு இருந்தது. அவரை வெறுத்தவர்கள் அப்பட்டமான செக்ஸ் நடிகை என்று பட்டம் கட்டிவிட்டார்கள். எழுதினார்கள். ஆனால் சில்க் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு ஆபாசத்தில் சிக்காமல் திரையில் பயணம் செய்தார்.




அதேபோல தன் சொந்த வாழ்க்கையில் அவர் காட்டிய தெளிவு, வியப்பின் பக்கங்களாக இன்றளவு உள்ளன.12 வயதில் ஏழ்மைக்கு தாக்குப்பிடிக்கமுடியாமல் நடிக்க வீட்டைவிட்டு ஓடிவந்தபோது அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுபற்றி பின்னர் சில்க்கிடம் கேட்டதற்கு, பணம், பங்களா வந்தபிறகு எல்லாம் சரியாயாகிவிட்டது ’’ என குடும்பத்தி னரின் நிஜ முகத்தை நாசூக்காய்தான் சொன்னார்.. புகழ் கிடைத்ததும் வந்து சேர்ந்தவர் களை , காழ்ப்புணர்ச்சிகாட்டி பொதுவெளியில் என்றைக்குமே சில்க் அவமானப்படுத்தவில்லை..சிவாஜிபோன்ற மூத்த ஜாம்பவான்கள் வரும்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் கால்மேல்போட்டு அமர்திருக்கிறார்களாமே என்று கேட்டதற்கு அவர் பதற்றப்படவேயில்லை..’’நான் சிறுவயதிலிருந்தே அப்படி கால்மேல் கால் போட்டே அமர்ந்து வளர்ந்தவள். செட்டில் ஆடி வந்து விட்டு டயர்டாக அமரும்போது எனக்கு அதுதான் வசதி.. அதையெல்லாம் விட்டுவிட்டுபோலியாக மரியாதை கொடுக்க நான் தயாரில்லை’’ என்று பட்டென்று சொன்னவர் சில்க்.முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் திடீர் விழா என்றபோதும், ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் செய்தால், அதனை சமன் செய்ய சில மாதங்களாகும் என்றும் அதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என்றும் தெரியவந்ததால், முதலமைச்சரின் விழாவையே ஒதுக்கிவிட்டு ஷுட்டிங்கிற்கு போன துணிச்சல்கார பெண்..




சாவித்திரி, சுஜாதா மாதிரி நடிக்க ஆசைப்பட்ட வருக்கு கிடைத்தது கவர்ச்சி வேடங்கள்தான்.. ஒரு கட்டத்தில டாப் ஸ்டார் என்ற அந்தஸ்தை எட்டி, தயாரிப்பாளர்கள் அவர் காலடியில் தவமிருந்த போதும், தனக்கு இந்த வெயிட்டான வேடம்தான் வேண்டும் என்று யாரையும் அவர் நிர்பந்தித்தது கிடையாது.தன்னை நம்பி எதை எதிர்பார்த்து தயாரிப்பாளர்கள் வருகிறார்கள் என்பதும் அவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கை காட்டினால் குழப்பம் மிஞ்சி தர்ம சங்கடங்கள்தான் நேரும் என்று சொன்னவர் சில்க்200 படங்கள் நடித்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் குளறுபடி செய்யும் நடிகை சில்க் என்று குற்றம்சாட்டி பத்திரிகைகள் எழுதியபோது, ‘’நீங்கள் சொல்வது உண்மையென்றால், ஏன் தயாரிப்பாளர்கள் என்னை தொடர்ந்து நாடிவருகிறார்கள்’’? என பத்திரிகை உலகத்தையே திருப்பி கேட்டவர்.அலைகள் ஓய்வதில்லை பட ரோல்தான் அவருக்கு மிகவும் பிடித்தது என்பதால் சில்க்கின் முதல் பேவரைட் இயக்குநர் பாரதிராஜாதான். அடுத்து பாலுமகேந்திரா..




சில்க் ஸ்மிதாவின் மனம் கவர்ந்த ஒரே நடிகர்,, வேறு யாரு நம்ம உலக நாயகன்தான்.சரியான நேரத்தில் திருமணமாகி செட்டில் ஆவேன் என்று சொல்லிக்கொண்டுவந்த சில்க் ஸ்மிதாவுக்கு.. கடைசியில் நிரந்தர வாழ்வு தந்தது, தற்கொலைதான்..சில்க்கின் வாழ்வில்தான் எத்தனையெத்தனை மனிதர்கள்,, எத்தனையெத்தனை ஏமாற்றங்கள்.. மர்மச்சாவு கண்ட மர்லின் மன்றோபோல்"என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்? கண்ணிலே என்ன உண்டுகண்கள்தான் அறியும்.."அவள் ஒரு தொடர்கதை படத்தின் கண்ணதாசன் பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன..சில்க் ஸ்மிதா மறைந்து இன்றோடு கால் நூற்றாண்டுகள் ஆகின்றன.. ஆனால் அவரின் அழகு இன்றளவும் ஆண்களை மட்டுமின்றி பெண்களையும் கொண்டாட வைத்துக்கொண்டிருக்கிறது, காந்த கண்ணழகி டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்தபடியாக..சில்க் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம் அவர் இளமையிலேயே மறைந்தது தான்..கிழத்தோற்றம் கொண்ட சில்க் சுமிதாவை இந்த உலகம் பார்க்கமுடியாதபடி செய்துவிட்டார்.