ஏபிபி தி சதர்ன் ரைசிங் மாநாட்டில் நடிகை கெளதமி


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024' தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால்   நேற்று காலை தொடங்கி வைத்தார். முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.  நடிகை கெளதமி இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களில் ஒருவராக கலந்துகொண்டார். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தனது பயணம் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான உறவு , தனது அரசியல் வாழ்க்கை என விரிவான விஷயங்களைப் பற்றி பேசினார் கெளதமி.


எல்லா துறைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்


" வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால் அரசியல் மட்டும் சினிமா மட்டும் இல்லாமல் இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் நிறைய நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். அதற்காக பெண்கள் கொஞ்சம் கடுமையானவராக இருக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பது நம்மை சுற்றி நடப்பதும் தான் நாம் நம் வழிநடத்தும் விதத்தை பாதிக்கின்றன. அதனால் இதனை எல்லாம் கடந்து நாம் ஒரு விஷயத்திற்காக உழைக்கும் விதத்தையும் நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் தீர்மாணிக்கிறது. "


" இந்தியாவில் விதியை நம்பும் வழக்கம் இருக்கிறது. நான் அப்போது நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். ஆனால் என் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்துவிட்டது. ஆலீஸ் இன் வண்டர்லேண்ட் கதையில் வருவது போலதான் என் வாழ்க்கை. சினிமா என்பது எதிர்கால திட்டத்திலேயே கிடையாது. இது தான் வேண்டும் என்று எல்லாம் எனக்கு சினிமா இல்லை.  எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. வெள்ளித்திரை , புகழ் எதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. இதில் என்ன புதிதாக செய்துபார்க்கலாம் என்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது. 


ஒரே ஒரு வருடத்தில் 13 முதல் 14 படங்கள் நடித்திருக்கிறேன். என்னவெல்லாம் புதிதாக செய்துபார்க்க முடியுமே எல்லாமே செய்திருக்கிறேன். என் சினிமா வாழ்க்கையில் நான் எடுத்த ஒரு முடிவுக்கு கூட நான் வருத்தப்படவில்லை. தூக்கமில்லாமல் , அடிபட்டு கடினமாக உழைப்பது எனக்கு பிடித்திருந்தது. ஒரே நேரத்தில் வெவ்வேற மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறேன். சில நேரங்களில் நான் நடித்த படங்களே எனக்கு மறந்திருக்கின்றன. ஆனால் நான் எப்போது ஏதாவது புதிதாக முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். வாழ்க்கை என்பதே முன்னேறி சென்றுகொண்டிருப்பது தான். " என கெளதமி பேசினார்.


புற்றுநோய் பற்றி நடிகை கெளதமி


"உண்மையைச் சொன்னால் கேன்ஸர் எனக்கு பெரிய அதிர்ச்சியான தகவலாக வந்து சேரவில்லை. அதற்கான பரிசோதனையின் போது தான் எனக்கு கேன்ஸர் இருப்பது தெரியவந்தது. என் மகள் பிறந்ததில் இருந்தே நான் தனியாக தான் இருந்து வருகிறேன். அதே நேரத்தில் தான் என் பெற்றோர்களும் இறந்துபோனார்கள். அதனால் என் மகளை நான் ஒருத்தி மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவளை யார் பார்த்துக்கொள்வார் என்று நினைத்தேன். அதனால் என் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் மார்பக புற்றுநோய் பற்றி எனக்கு தெரிந்தது. வருடந்தோறும் புற்றுநோய்க்கு எடுக்கும் டெஸ்ட் எடுத்து வந்தேன். அப்போது ஒருமுறை எனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.  ஒரு பிரச்சனையை என்னவென்று தெரிந்துகொள்வதே அதை சரி செய்வதற்கான பாதி வேலை முடிந்தது மாதிரி. அந்த பிரச்சைனையை சரி செய்வதற்காக வழிகளை தேட வேண்டும். நான் ரொம்ப பிராக்டிக்கலாக இந்த பிரச்சனையை அனுகினேன்.


புற்றுநோய் அதன் துவக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் அது சரி செய்யக்கூடியது தான் . கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பே நான் அதை கடந்து வந்திருக்கிறேன் என்றால் இன்று அது இன்னும் சாத்தியம். நானே ஒரு சிறந்த உதாரணம் . ஒரு பெண் தனக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். குடும்பத்தை வழிநடத்தும் பெண்கள் தங்கள் தங்களுக்கு தான் முதலுரிமை கொடுத்துக்கொள்ள வேண்டும்" என கெளதமி தெரிவித்துள்ளார்.