பத்திரிகையாளரும் தனது நண்பருமான கவுரி லங்கேஷை புதைக்கவில்லை. விதைத்திருக்கிறோம் என ஏபிபி மாநாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் உருக்கமாக பேசியுள்ளார். 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024' தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.


 


அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.


"ஒற்றை நபர்; பல்துறை திறமை" என்ற தலைப்பில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் முதல் சினிமா வாழ்க்கை குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, தனது நண்பர் கவுரி லங்கேஷ் குறித்து பேசிய அவர், "பேசியதால் சுட்டு கொல்லப்பட்டார்.


அவரை புதைக்கும் போது, ​​அவரை புதைக்கவில்லை, விதைகளாக விதைக்கிறேன் என்று சொன்னேன். ஒரு குரலை அடக்கினால் அதைவிடப் பெரிய குரல் எழும் என்பது மக்களுக்குத் தெரியும். வலி என்பது வேறு.


எனது குழந்தை மற்றும் கௌரி லங்கேஷ் இறந்த பிறகு, எனக்கு இன்னும் அதிக பொறுப்புகள் உள்ளன. எனக்கு மகள்கள் உள்ளனர். அவர்கள் மீது எனக்கும் பொறுப்புகள் உள்ளன. அதனால்தான் நான் வலியால் பலமாகிவிட்டேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், "சகிப்பின்மை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இந்திய அரசியலைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். நாங்கள் எதிர்காலத்தை பற்றி புதிதாக யோசிக்கிறோம்.


நான் இடதுசாரியும் இல்லை வலதுசாரியும் இல்லை. அனைவருக்கும் சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். பல விஷயங்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றன. அதனால் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. தவறான அரசியல் செய்யும் இப்படிப்பட்டவர்கள் உங்களுடன் அமர்ந்து பேச விரும்பவில்லை. அவர்கள் உங்களை அமைதியாக்க விரும்புகிறார்கள்" என்றார்.


மாநாட்டில் கூட்டாட்சி குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, "கூட்டாட்சியே இப்போதைய தேவை. இந்தியா நாடு மட்டும் அல்ல. அது ஒரு துணை கண்டம். மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம். பல இனக்குழுக்கள். பல மொழிகளை கொண்டது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை மொழியில் இருந்து வேறுபடுகிறோம். கலாசாரத்தில் இருந்து வேறுபடுகிறோம்.


எல்லா மாநிலங்களும் தனித்துவமான காலநிலையை கொண்டுள்ளது. மொழியை கொண்டுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் தனித்துவமான கொள்கை தேவைப்படுகிறது. எனவேதான், திமுக மாநில சுயாட்சியை மூர்க்கமாக பேசுகிறது" என்றார்.