தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் காம்போவில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் ஹிட்டாகி உள்ளன. இன்றும் அந்த காமெடி காட்சிகளை ரிப்பீட் மோட் போட்டு பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர் என்றால் அது மிகையல்ல. அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு.


அந்த சமயத்தில் கவுண்டமணி - செந்தில் மற்றும் வடிவேலு இடையே ஏற்பட்ட ஈகோ பற்றி பிரபலமான இயக்குனர் வி. சேகர் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார். 



 


இது தொடர்பாக அவர் பேசுகையில் 'வரவு எட்டணா செலவு பத்தணா' படத்தில் நடிகர் வடிவேலு ஜோடியாக கோவை சரளாவை போட்டது முதலே மோதல் ஆரம்பித்தது. கமல்ஹாசன், பாக்யராஜ், கவுண்டமணி, செந்தில் என பலருடன் நடித்த கோவை சரளா முதலில் வடிவேலுவுடன் நடிக்க சம்மதிக்கவில்லை. ஒரு சில சீன் மட்டுமே நடிச்சு இருக்கான். அவனோட நான் ஜோடியாக நடித்தால் என்னுடைய மார்க்கெட் போய்விடும் என தயங்கி உள்ளார் கோவை சரளா.


இந்த விஷயம் கவுண்டமணி - செந்தில் காதுக்குப்போக அவர்கள் இருவரும் சரளாவை அழைத்து குழப்பியுள்ளனர்.


பின்னர் கவுண்டமணியிடம் போய் நீங்க எல்லாம் வேற வேற நடிகைகள் கூட நடிக்கிறீங்க. நடிகைகள் மட்டும் உங்க கூட மட்டும் தான் நடிக்கணுமா? என பேசி கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தேன். அவர்கள் காம்போ பயங்கர ஹிட் அடித்தது. 


கவுண்டமணி - செந்தில் இருவரும் வடிவேலுவை எங்கு பார்த்தாலும் காலேஜில் ஜூனியர் சீனியர் இடையே நடக்கும் ராகிங்போலதான் நடத்துவார்கள். அவர்கள் அனைவரும் சாப்பிடும் இடத்திற்கு வடிவேலு வந்தால் இங்க பெரியவங்க எல்லாரும் இருக்காங்க தட்டை எடுத்துக்கொண்டு அந்த பக்கம் போ என விரட்டி விடுவார். 


இதை எல்லாம் மனசில் வைத்திருந்த வடிவேலு புது கார் வாங்கியதும் அதை கொண்டு வந்து கவுண்டமணி, செந்தில் கார்கள் இருக்கும் இடத்திற்கு வேகமாக இடிப்பதுபோல நிறுத்த செல்வார். அதை பார்த்த கவுண்டர் டென்ஷனாவார். இதுக்கு தான் இவன்களை எல்லாம் வளர்த்து விடாதேன்னு சொன்னேன் என என்னிடம் வந்து சொல்வார்




ஒரு படத்தில் கவுண்டமணி - வடிவேலு அப்பா- மகன் கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. அந்த விஷயம் செந்தில் காதுகளுக்கு எப்படியோ போக கவுண்டமணியிடம் சொல்லி அதை கெடுத்துவிட்டார். கவுண்டமணி - வடிவேலு காம்போ ஒரு படத்தில் ஒர்க் அவுட் ஆகிவிட்டால் அதற்கு பிறகு கவுண்டமணி - செந்தில் காம்போ அடிபடாது என்ற பயம் அவருக்குள் இருந்தது.


கவுண்டமணி என்னிடம் வந்து வடிவேலுவை அந்த படத்தில் இருந்து எடுக்க சொன்னார். அட்வான்ஸ் கொடுத்தாச்சு, அவன் அந்த கேரக்டரில் நடிக்க பயிற்சி எல்லாம் எடுத்துக்கொண்டான் இதற்கு பிறகு வேண்டாம் என சொன்னால் நன்றாக இருக்காது, என சொல்லிவிட்டேன். 


வருடத்திற்கு ஒரு படம் பண்றோம். அதே காம்போ வைத்து எடுத்தால் வேரியேஷன் இருக்காது. மாத்தி மாத்தி எடுத்தால்தான் மக்களுக்கு பிடிக்கும். உங்க ஈகோக்காக மற்றவர்களை ஒதுக்க முடியாது என எவ்வளவு எடுத்து சொன்னாலும் கவுண்டமணி கேட்பதாக இல்லை. அப்போ நான் விலகிக்கொள்கிறேன் என சொல்லிவிட்டார். அப்படி கதையை மாத்தி வினு சக்கரவர்த்தியை வைத்து எடுத்த படம் தான் 'காலம் மாறிப்போச்சு' படம் என்றார் இயக்குநர் வி. சேகர்.