திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைய சமகால பெண்கள் அஞ்சுவதை பரவலாக கேட்பதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். 





இதுதொடர்பாக வைரமுத்து வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், என் மதிப்புக்குரிய அமைச்சர் ஒருவரின் மனைவியிடம் கேட்டேன் ‘பெண் பிள்ளைகளுக்கு எப்பொழுதம்மா திருமணம்?’ அவர் முகத்தில் - ஒரு வாடிய புன்னைகை ஓடி உடைந்தது ‘சமகாலத்தில் திருமணமான சகபெண்களின் வாழ்க்கையைப் பார்த்துப் பார்த்துத் திருமணம் என்றதும் அஞ்சுகிறார்கள் அண்ணா’ என்றார் இந்தக் குரலை நான் பரவலாகக் கேட்கிறேன் நிகழ்காலத் தலைமுறையின் விழுமியச் சிக்கல் இது ஒன்று திருமண பந்தத்தின் ஆதி நிபந்தனைகள் உடைபட வேண்டும் அல்லது திருமணம் என்ற நிறுவனமே உடைபடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஒரு யுக மாற்றத்திற்குத் தமிழர்கள் அல்ல அல்ல மனிதர்கள் தங்கள் மனத்தைத் தயாரித்துக்கொள்ள வேண்டும் சமூகம் உடைந்துடைந்து தனக்கு வசதியான வடிவம் பெறும் - கண்டங்களைப்போல” என தெரிவித்துள்ளார்.

மாறிப்போகும் எண்ணங்கள்  


சமீபகாலமாக திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு இளம் வயதினர் பலரும் வந்துவிட்டதை நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதை வைத்து கேட்டிருக்கலாம். அது ஒரு அழகான உறவு என்றாலும், அதற்குள் இருக்கும் சிக்கலை தீர்க்க தெரியாமலும், பிறரைச் சார்ந்து இருக்காமல் வாழ வேண்டும் என்ற எண்ணமும், தனி மனித சுதந்திரமும் என பல வகையான எண்ணங்கள் திருமணம் மீதான விருப்பத்தை குறைத்து வருகிறது என்பதே உண்மை. 


அதேசமயம் பொருளாதாரம், கடன் சுமை போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளும் இளம் வயதினரை அதிகம் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. அப்படியான நிலையில் திருமணம் செய்து கொள்ள நினைத்தாலும் நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள், அண்டை வீட்டார் என பலரும் திருமண உறவில் ஏற்படும் பிரச்னைகளை தினமும் சொல்லி சொல்லி அந்த உறவின் மேல் ஒரு பயத்தை உண்டாக்கி விடுகிறார்கள்.


சிக்கல் என்றால் அதற்கான தீர்வும் இருக்கும் என சொல்ல வேண்டும். எந்த ஒரு விஷயமும் தெரிந்து  கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் நமக்குள் ஒன்றிணைய போவதில்லை. அப்படியாக இருக்கும் நிலையில் திருமண உறவுக்குள் செல்லவே வேண்டாம் என நிறைய பேர் நினைக்கிறார்கள்.


ஒருவர் வாழ்க்கையை போல மற்றவர்கள் வாழ்க்கை இல்லை என்பதை உணர வேண்டும். அதேபோல் சினிமாவில் காட்டப்படுவது போல பிரச்னையே இல்லாமல் வாழ்க்கை நகராது. ஆனால் மற்ற உறவுகளை போல திருமண உறவும் ஒரு அழகான ஒன்று என்பதை இளம் வயதினர் உணர வேண்டுமென சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.