திருட்டுப்பயலே படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஜீவன் மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
யுனிவர்சிட்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜீவன் காக்க காக்க, திருட்டுப்பயலே படம் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். தொடர்ந்து நான் அவனில்லை, மச்சக்காரன், நான் அவனில்லை 2, தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவேயில்லை. கடைசியாக 2015 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் அதிபர் என்ற படத்தில் ஜீவன் நடித்திருந்தார்.
இதனால் அவரை கிட்டதட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்தே போய்விட்டனர் என சொல்லலாம். இதற்கிடையில் ஜீவன் சிக்னேச்சர் என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார். யாயா, பக்ரீத் படங்களை தயாரித்த எம் 10 புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். முருகராஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டியும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். இளவரசு, ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள சிக்னேச்சர் படத்தை பக்ரீத் படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.
படம் தொடர்பாக இயக்குநர் அளித்துள்ள பேட்டியில், இன்றைய உலகில் தனிப்பட்ட தகவல் முதல் நிதி பரிவர்த்தனைகள் வரை அனைத்தையும் ஒரே ஒரு கையெழுத்துடன் அணுகலாம். கைநாட்டில் இருந்து டிஜிட்டல் கையொப்பங்கள் என நாம் முன்னேறியுள்ளோம். ஆனால் இது சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால் நம் வாழ்க்கையை அழிக்கக்கூடும் என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவருக்கு நடந்த நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தால் இந்த படம் உருவாகியுள்ளதாகவும் ஜெகதீசன் சுபு கூறியுள்ளார்.
சிக்னேச்சரில் மக்களோடு பழகி ரகசிய டேட்டாவை திருடும் கேரக்டரில் ஜீவன் நடிக்க, அதே டேட்டாவை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நபராக நட்டி நடிக்கிறார். கதையை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, துபாய் மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளது. ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது என ஜெகதீசன் சுபு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிக்னேச்சர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இயக்குநர் ஹரி படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.