பிரபல நடிகரான பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, 'சலார்' படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'சலார்'. இந்தப் படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, ‘சலார்' படத்தில் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. 'சலார்' படத்தில் இடம்பெறும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரம், கதையின் நாயகனான பிரபாஸிற்கு இணையான கதாபாத்திரமாக படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.
இயக்குநர் பிரசாந்த் நீல் பேட்டி
பிருத்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், '' பிருத்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், 'சலார்' படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது.
படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது. அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்'' என்றார்.
'கே ஜி எஃப் 2' படமானது பிரமாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ், 'சலார்' படத்தில் இணைந்திருப்பது, இந்திய திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 'பாகுபலி' மற்றும் 'கே ஜி எஃப்' ஆகிய இரண்டின் கலவையாக 'சலார்' உருவாகி வருகிறதாம். இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.