தமிழ் சினிமா எத்தனையோ மாபெரும் வெற்றி படங்களை கடந்து வந்துள்ளது. அந்த வகையில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் தான் 'பருத்திவீரன்'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். கார்த்தியின் திரைப்பயணத்தில் இன்று வரை மிக முக்கியமான படமாக கருதப்படும் 'பருத்திவீரன்' திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அமீர் இடையே கடந்த சில நாட்களாக நடைபெறும் மோதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் மாறி மாறி அவர்களின் கருத்தை எதிராளிக்கு எதிராக தெரிவித்து வருவது இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் சிவகுமாரின் உறவினரான ஞானவேல் ராஜா, அவரின் மகன்களான சூர்யாவையும் கார்த்தியையும் வைத்து ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான எந்தெந்த படங்களை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதை பார்க்கலாம் :
பருத்திவீரன் :
2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிகனாக அறிமுகமான இப்படத்தில் நடிகை பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேசிய விருது, பிலிம்பேர் விருது என எக்கச்சக்கமான விருதுகளை இப்படம் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் மகான் அல்ல :
சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி - காஜல் அகர்வால் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்து வெற்றிப்பாடல்களாக அமைந்தன.
சிறுத்தை :
இயக்குநர் சிவா இயக்கித்தில் 2011ம் ஆண்டு இரட்டை கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்த இப்படம் அந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷல் படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ராக்கெட் ராஜா கார்த்தியும் சந்தானமும் இணைந்து காமெடியில் கலக்கி இருந்தனர். பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை ஈட்டியது.
அலெக்ஸ் பாண்டியன் :
கார்த்தி - அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் சூரஜ் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.
ஆல் இந்த ஆல் அழகுராஜா :
கார்த்தி நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான காமெடி திரைப்படம். இரட்டை கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
பிரியாணி :
அதே 2013-இல் கார்த்தி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி கலந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் பிரியாணி. ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி, மதுமிதா, சம்பத் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
மெட்ராஸ் :
2014-ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன், ரித்விகா, மைம் கோபி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் வடசென்னை பகுதியை மையமாக வைத்து அமைக்கப்பட்டு இருந்தது. பா. ரஞ்சித்தின் இரண்டாவது படமான மெட்ராஸ் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.
கொம்பன் :
எம்.முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் ஜி.வி. பிரகாஷ். 2015ம் ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சகுனி :
கார்த்தி நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான சகுனி திரைப்படத்தை ஷங்கர் தயாள் இயக்க எஸ்.ஆர். பிரபு தயாரித்து இருந்தார். ப்ரணிதா, ரோஜா, பிரகாஷ்ராஜ், ராதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை திரையரங்கில் வெளியிடும் உரிமையை பெற்று இருந்தார் ஞானவேல் ராஜா.