சினிமா சமீப காலமாக பிரம்மாண்டத்தை நோக்கியே நகர்ந்து வருகிறது. பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்பட்ட ஷங்கரைத் தொடர்ந்து, பாகுபலி படம் மூலம் பிரம்மாண்டமான திரைப்படத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து சென்றார் இயக்குநர் ராஜமௌலி. வரலாற்று பின்புலம் கொண்ட கதைக்களத்தை மையமாக வைத்து அவர் தொடங்கிய அந்த ட்ரெண்ட், மேலும் மேலும் அதிகரித்து ஏராளமான வரலாற்று படங்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது. 


 



பேண்டஸி  படங்கள் :


தொழில்நுட்ப வளர்ச்சியால் நிஜ வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட மாயாஜால உலகத்தை திரையில் காண முடிவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. அதனால் ரசிகர்ளும் இது போன்ற பேண்டஸி திரைப்படங்களை அதிக அளவில் விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு  புதுவித அனுபவத்தை கொடுக்கிறது. தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவிலும் தற்போது பிரம்மாண்டமான தயாரிப்பில் வரலாற்று சார்ந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாவதைப் பார்க்க முடிகிறது. 


கங்குவா - STR 48 :


அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. 3டி தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு 10 மொழிகளில் வெளியாக உள்ளது. கங்குவா படத்தை போலவே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்கும் STR 48 திரைப்படமும் மிக பெரிய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


 



மீண்டும் ராஜமௌலி :


இந்த ஆண்டு அடுத்தடுத்து பல பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. ஷங்கரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர், இந்தியன் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் வெளியாக உள்ளன. ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் ஒரு பிரம்மாண்டமான திரைப்படம் உருவாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இது போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னரே பல கோடிகளை ஈட்டிவிடுகிறது. அதன் பிரம்மாண்டமான மேக்கிங் காரணமாக சர்வதேச அளவிலும் இப்படங்கள் கவனம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


திரைக்கதையில் சொதப்பல் :


பிரம்மாண்டமான திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தாலும் சில சமயங்களில் அது நல்ல ஒரு திரைக்கதையை கொடுக்கத் தவறிவிடுகிறது. ஸ்டார் நடிகர்களின் பேஸ் வேல்யூவிற்காகவே படம் வசூலை ஓரளவுக்கு ஈட்டிவிடுகிறது. ஆனால் அது உண்மையிலேயே ஒரு நல்ல திரைக்கதை கொண்ட படமா என்றால் அது பெரும்பாலும் கலவையான விமர்சனங்களை தான் பெரும். 


மவுசு குறையாத நல்ல படங்கள் :


எனவே என்னதான் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான தயாரிப்பில் படங்கள் வெளியானாலும், சிறிய பட்ஜெட் படங்களும் நன்றாக ஓடினால் தான் சினிமா வளர முடியும். அந்த வகையில் பல சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல திரைக்கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. திரைக்கதைக்கு என்றுமே மக்கள் மத்தியில் மதிப்பு குறையாது என்பதற்கு இதுவே ஒரு அடையாளம்.