மாடலிங் துறையில் பிரபலமான நடிகை மீரா மிதுன்  ‘8 தோட்டாக்கள்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோவான ‘ஜோடி நம்பர் ஒன் சீசன் 8’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் படக்குழுவுக்கும், மீரா மிதுனுக்கும் இடையே பிரச்னை எழுந்த நிலையில், அவர் அதிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.


மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனைத்து நாட்களிலுமே வீடு சர்ச்சைகளால் நிரம்பியிருந்தது. அதனைத்தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்ட மீரா மிதுன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதில் சூர்யா, விஜய், அஜித் குறித்து இவர் பேசிய வீடியோ கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து பட்டியலினத்தை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.




இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மீராமிதுனை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி உட்பட பலர் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவரின் காதலர் எனச் சொல்லப்படும் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14  ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் வேண்டும் மீரா மிதுன் தரப்பு மனு தாக்கல் செய்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது. 


இதனிடையே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அதன் நகல்களை பெறுவதற்காக சாம் மற்றும் மீரா மிதுன் ஆகியோர் நேற்று ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார். மீரா மிதுன் ஆஜராக வில்லை. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சுதாகர், ஜாமீன் வழங்கும் போது ஒவ்வொரு திங்கட் கிழமை காலையும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் மீரா மிதுன் நிறைவேற்ற வில்லை என்றார். 




அப்போது பேசிய நீதிபதி நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்றால் காவல்துறை ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றார். அதனைத் தொடர்ந்து விசாரணையை ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 


முன்னதாக, பேயை காணோம் படப்பிடிப்பில் இருந்து திடீரென காணாமல் போனதாக படக்குழு சார்பில் மீரா மிதுன் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன் உண்மை என்ன என்று மக்களுக்கு தெரியும் என்றும் எனக்கு தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் ஆக ஆசை இருக்கிறது என்றும் அதனை தடுக்கும் நோக்கில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசாட்டுகள் எழுப்பப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார்.