உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள மார்வெல் நிறுவனம், தனக்கென தனி திரையுலகையே கட்டமைத்துள்ளது. பல்வேறு ஆபத்துகளில் இருந்து சூப்பர் ஹீரோக்களை கொண்டு உலகத்தை காப்பாற்றும் வகையிலான, மார்வெல் திரைப்படங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வசூலாக குவிப்பதும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிளாக் பாந்தர் வகாண்டா பாரெவர் திரைப்படமும் வசூலில் வாரிக் குவித்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக ஜேம்ஸ் கன் இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்களான வெளியான, தி கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக, ஸ்டார் லார்ட் தலைமையிலான அந்த குழு, தோர் லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் இடம்பெற்றது. அதைதொடர்ந்து, தி கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படத்தின் இறுதி  பாகம், அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது.  எண்ட் கேம் சம்பவத்திற்கு பின் காணாமல் போன கமோரா கதாபாத்திரத்தை தேடும் பணியை, மையமாக கொண்டு புதிய படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தான், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தி கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி குழுவினரை மையப்படுத்தி ஹாலி டே ஸ்பெஷல் எனும் சிறப்பு எபிஷோடை ஜேம்ஸ் கன் இயக்கியுள்ளார். அதில், தனது காதலி கமோராவை தேடி வருத்தப்படும் ஸ்டார் லார்டை, அவரது நண்பர்கள் எவ்வாறு சமாதானபப்டுத்துகின்றனர் என்பதை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் நகைச்சுவையாக உருவாகியுள்ள இந்த எபிஷோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


நோ-வேர் கிரகத்தை முற்றிலுமாக கைப்பறியுள்ள கார்டியன்ஸ் குழுவினர், அதனை மீண்டும் கட்டமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். எதிர்வரும் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாட ஒட்டுமொத்த கிரகமே தயாரானாலும், ஸ்டார் லார்ட் மட்டும் வருத்தத்தில் இருக்க அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர, நண்பர்களான டிராக்ஸ் மற்றும் மேண்டிஸ் முடிவு செய்கின்றனர். இதையடுத்து ஸ்டார் லாடிற்கு மிகவும் பிடித்த நடிகரான கெவின் பேகனையே, பரிசாக கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என முடிவெடுத்து, டிராக்ஸ் மற்றும் மேண்டிஸ் பூமிக்கு வருகின்றனர். அங்கு, அவெஞ்சர்ஸின் முக்கிய கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் வகையிலான பல காட்சிகள் இடம்பெற்று இருப்பது, ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஆங்காங்கே டிசி கதாபாத்திரங்கள் குறித்து பேசி இருப்பது, எதிர்காலத்தில் மார்வெல் மற்றும் டிசி கதாபாத்திரங்கள் ஒரே படத்தில் தோன்ற வாய்ப்புள்ளதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






ராக்கெட், குரூட் மற்றும் கிராக்ளின் போன்ற கதாபாத்திரங்களும் திறம்பட பயன்படுத்தப்பட்டு உள்ளன. சோகத்தில் ஆரம்பித்த எபிஷோட் கெவின் பேகனின் வருகையால் சந்தோஷமானதாக நிறைவடைகிறது. இறுதியாக, உண்மையில் தான் யார் என்பதை ஸ்டார் லார்டிடம், மேண்டிஸ் கூறுவதுடன் இந்த எபிஷோட் நிறைவடைந்துள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கார்டியன்ஸ் குழுவில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதையும் தெளிவாக விளக்கும் விதமாக இந்த எபிஷோட் அமைந்துள்ளது.


இதையடுத்து, ஸ்டார் லார்ட் மற்றும் மேண்டீஸ் இடையேயான உறவு எப்படி தொடர உள்ளது, கமோராவை கார்டியன்ஸ் குழு தேடி கண்டுபிடிக்குமா என்ற பல்வேறு கேள்விகளுடன், தி கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி ஹாலி டே ஸ்பெஷல் எபிஷோட் நிறைவடைந்துள்ளது. மேலும், அதில் இடம்பெற்றுள்ள ஒரு போஸ்ட் கிரெடிட் சீன் மூலம், இதே போன்ற மேலும் சில சிறப்பு எபிஷோட்களை மார்வெல் வெளியிட உள்ளது தெரிய வந்துள்ளது.