Chinna Chinna Kangal Song: நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'தி கோட்' படத்தில் இடம்பெற்றுள்ள "சின்ன சின்ன கண்கள் சிரிக்கின்றதோ" எனும் பாடல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் - பவதாரிணி குரல்களில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடல் குடும்ப மெலடியாக அமைந்து ரசிக்க வைக்கிறது.


சின்ன சின்ன கண்கள் சிரிக்கின்றதோ..


மேலும் விஜய் - சினேகா குழந்தையுடன் வரும் தி கோட் படத்தின் காட்சிகளும் இந்தப் பாடலில் இடம்பெற்று கவனமீர்த்துள்ளது. கபிலன் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.  1997ஆம் ஆண்டு வெளியான 'காதலுக்கு மரியாதை' படத்துக்குப் பிறகு பவதாரணி - விஜய் குரல்கள் இணைந்து இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளதும் ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெற்று வருகிறது.



இந்நிலையில், மறைந்த பவதாரிணியின் குரல் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்த உணர்ச்சிகர பதிவு ஒன்றை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


யுவன் ஷங்கர் ராஜா உணர்ச்சிகரப் பதிவு


“தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூருவில் இந்தப் பாடலை நாங்கள் கம்போஸ் செய்தபோது நானும் வெங்கட் பிரபுவும் இந்தப் பாடல் எங்கள் சகோதரிக்கானது என்பதை உணர்ந்தோம். பவதாரிணி மருத்துவமனையில் இருந்து உடல்நலன் தேறி வந்தவுடன் இந்தப் பாடலை அவரை பாடவைக்கலாம் என நினைத்தேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர் உயிரிழந்த தகவல் எனக்கு வந்தது. அவரது குரலை இப்படி நான் பயன்படுத்துவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது இசைக் குழுவினருக்கும், இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு கலவையான உணர்ச்சிகர தருணம்” எனப் பதிவிட்டுள்ளார்.


 




முன்கூட்டியே லீக்கான பாடல்


இதனிடையே மாலை 6 மணிக்கு வெளியாகும் எனக்கூறப்பட்ட சின்ன சின்ன கண்கள் பாடல் முன்கூட்டியே இணையத்தில் லீக்கானது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தி கோட் பாடல் இன்னும் சில நிமிடங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என வெங்கட் பிரபு பதிவிட்டதைத் தொடர்ந்து இப்பாடல் முன்கூட்டியே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.