சென்னை 600028 




வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் சென்னை 600028 (Chennai 600028). ஜெய், சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி, விஜய் வசந்த், விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னை 28 வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன.


மஞ்சுமெல் பாய்ஸின் முன்னோடி..


சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். இந்தப் படத்தைப் பார்க்கையில் அதில் மொத்தம் எத்தனை கதாபாத்திரங்கள் இருந்தார்கள், ஒவ்வொருவரின் பெயர் என்ன என்பதை பார்வையாளர்கள் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சுபாஷ் என்கிற பெயரைத் தவிர. அந்தப் படத்தின் நோக்கமும் அதுதான். தனித்தனியாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர் அவர்களின் குடும்பம் எப்படியானது அவர்களிடம் என்ன தனித்துவங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் விளக்க இயக்குநர் முற்படவில்லை. மஞ்சுமெல் பாய்ஸ் என்று நினைத்தால் அவர்களின் நட்பை நம்மால் உணரமுடிம் இல்லையா...


இப்போது வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் முன்பு இந்தப் படத்தை பார்த்து முடித்தபோது அந்தப் படத்தில் நடித்த சிவா, ஜெய், நிதின் சத்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த் என ஒருவரின் பெயர் கூட நம் மனதில் பதிந்திருக்காது. ராயபுரம் ராக்கர்ஸ் அணியை ஷார்க்ஸ் அணி ஒரு வழியாக கிரிக்கெட் போட்டியில் ஜெயித்துவிட்டது என்கிற ஒரே உணர்வுதான் இந்தப் படம் முடிந்த நம் மனதில் தங்கியிருந்த ஒரே உணர்ச்சி. 


ஸ்ட்ரீட் கிரிக்கெட் கதை


ஒரு படத்துக்கு ரொமான்ஸ், ஆக்‌ஷன், டிராமா, சஸ்பென்ஸ் என எல்லாம் தேவைதான். ஆனால் எல்லா நேரமும் கதைகள் தேடி அலையாமல் நம் வீட்டுக்கு பின் இளைஞர்கள் விளையாடும் கிரிக்கெட் மேட்சில்  இருந்துகூட கதை எடுக்கலாம் என்பதை செய்துகாட்டியவர் வெங்கட் பிரபு.  மேலே சொன்ன எல்லா அம்சமும் நிறைய காமெடியுடன் இந்தப் படத்திலும் இருக்கும். 




ஆடவே தெரியாதவர்களை ஆட வைப்பது, நடிக்கத் தெரியாதவர்களை நடிக்க வைப்பது என கொஞ்சம் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவரவருக்கு வருவதை அவரவர் செய்யுங்கள் எது நல்லா இருக்கோ அதை வைத்துக் கொள்ளலாம், எது நல்லா இல்லையோ அதை வெட்டி விடலாம் என்று ஒரு படம் எடுத்தது போல் அநாயாசமாக இப்படத்தை கையாண்டிருப்பார் இயக்குநர் வெங்கட் பிரபு.


சும்மா ஜாலிக்கி என்றாலும் அதிலும் யுவன் ஷங்கர் ராஜா ட்ரேட் மார்க் பாடல்களை கொடுக்கத் தவறவில்லை. ஸ்போர்ட்ஸ் டிராமா என்றால் ஷாருக் கான் நடித்த சக் தே இந்தியா, அதே போன்ற பிகில் என கோடிகளை செலவு செய்து எடுத்த படங்களை சொல்லலாம். இந்தப் படங்களில் நாம் ஹாலிவுட் படங்களுக்கே உரிய ஒரு திரைக்கதை வடிவத்தைப் பார்க்கலாம். உண்மையான உள்ளுர் ஸ்போர்ட்ஸ் டிராமா என்று சொன்னால் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு, சென்னை 28 போன்ற படங்களை சொல்லலாம். அதிலும் சென்னை 28 படத்தின் சிறப்பு, இப்படம் ஒரு மெசேஜ் சொல்லாத ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா.