சமீபத்தில் வெளியான தி கோட் படத்தின் விசில் போடு பாடலுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.


தி கோட் (The Goat)


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட். பிரஷாந்த் , பிரபுதேவா, சினேகா, மீனாக்‌ஷி செளத்ரி, லைலா, மோகன் , பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள்  இப்படத்தில் நடிக்கிறார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


விசில் போடு 


தி கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப் பட்டது. மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார். பொதுவாக விஜய் படங்களின் ஓப்பனிங் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் . மாஸ்டர் படத்தில் வாத்தி கமிங் , லியோ படத்தில் நான் ரெடி ஆகிய பாடல்கள் வெளியானபோது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.


அதே போல் யுவன் இசையில் விசில் போடு பாடலை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். விசில் போடு பாடல் வெளியாகி வெறும் 24 மணி நேரங்களில் 25 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. ஆனால் இந்தப் பாடல் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளியாகின. அனிருத் விஜய்க்கு இசையமைத்தப் பாடல்களுடன் விசில் போடு பாடலை ரசிகர்கள் ஒப்பிட்டு பேசத் தொடங்கினார்கள். மறுபக்கம் அஜித் ரசிகர்கள் யுவன் அஜித் படங்களுக்கு மட்டும்தான் மாஸான பாடல்களை கொடுப்பார் என்று பரப்ப தொடங்கினார்கள்.


குத்துப்பாட்டு என்றாலே தலைவலி தான்






மேலும் யுவன் குத்துப்பாடல்களுக்கு இசையமைப்பது தனக்கு பிடிக்காத ஒன்று என்று பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து விசில் போடு பாடல் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பேசத் தொடங்கினார்கள்.


இன்ஸ்டாகிராம் கணக்கை டியாக்டிவேட் செய்த யுவன்






விசில் போடு பாடலைப் பற்றிய பல்வேறு விவாதங்கள் ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கும்  நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டியாக்டிவேட் செய்துள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தனிப்பட்ட காரணங்கள் வேறு ஏதாவது இருக்கலாம் அல்லது விசில் போடு பாடலுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களை அவரை பாதித்திருக்கலாம் . அதில் இருந்து வெளியேற யுவன் சிறிது காலத்திற்கு சமூக வலைதளத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. தற்போது இந்த குழப்பங்களுக்கு யுவன் விளக்கமளித்துள்ளார். தன்னைப் பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி எனவும் தொழில்நுட்ப சிக்கலான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கும் வேலை செய்யவில்லை தற்போது அதை சரிசெய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் யுவன்.