டாப் ஸ்டார் பிரசாந்த்


வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்  நடிகர் பிரசாந்த் . சாக்லேட் பாயாக தொடங்கி பின் ஆக்‌ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவை வலம் வந்த பிரசாந்த், தற்போது விஜயின் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். விஜய் , பிரசாந்த் தவிர்த்து இப்படத்தில் பிரபுதேவா ,புன்னகை அரசி என்றழைக்கப் பட்ட சினேகா , க்யூட்டான லைலா, மைக் மோகன் உள்ளிட்ட விண்டேஜ் நடிகர்களின் பெரும் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. அதே போல் மறுபக்கம் பிரேம் ஜி, வைபவ் , அஜ்மல் அமீர் என புதிய தலைமுறை நடிகர்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


விசில் போடு பாடலில் ரசிகர்களை கவர்ந்த பிரசாந்த்


நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில்  நடிகர் பிரசாந்த் தோன்ற இருப்பது குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் வெளியான தி கோட் படத்தின் விசில் போடு பாடலில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். விசில் போடு பாடலுக்கு ராஜூ சுந்தரம் நடனம் அமைத்திருந்தார். ஒரு பக்கம் பிரபு தேவா இன்னொரு பக்கம் விஜய் என இருவரும் படு வேகமாக டான்ஸ் மூவ்ஸில் அசத்திக் கொண்டிருக்க அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் நடிகர் பிரசாந்த் நடனமாடியிருந்தார்.


விஜய் , பிரபுதேவாவைக் காட்டிலும் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஆடிய பிரசாந்தை ரசிகர்கள் பாராட்டினார்கள். தற்போது கோட் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் பிரசாந்த் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.


மூணு பேரும் போட்டி போடாம ஆடினோம்


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் “பொதுவாக நடிகர்களுக்கு இடையில் ஒரு போட்டி வரும் . நான் தான் தனியாக தெரியணும்  நான் தான் நல்லா பண்ணனும் என்று பொதுவாக நடிகர்கள் யோசிப்பார்கள். ஆனால் எனக்கு இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை. நாங்கள் மூன்று பேரும் போட்டியில்லாமல் ரொம்பவும் எஞ்சாய் பண்ணோம் . இந்த பக்கம் பிரபுதேவா ஆடிக் கொண்டிருந்தார். அந்த பக்கம் விஜய் , இந்த பக்கம்  நான் ஆடிக் கொண்டிருந்தேன். கஷ்டம்னு தெரியும் ஆனால் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அந்த பிராசஸை நாங்கள் மூவரும் ரொம்ப எஞ்சாய் செய்தோம்” என்று பிரசாந்த் கூறியுள்ளார்.


தனித்தன்மைதான் முக்கியம்


இதே நிகழ்ச்சியில் பிரசாந்துடன் கலந்துகொண்ட இயக்குநர் சுந்தர் சி விசில் போடு பாடல் பற்றி, சொல்லும்போது “நான் எப்போதும் ஆர்டிஸ்ட்டின் தனித்துவத்தை ரசிப்பவன் . மாஸ்டர் சொல்லிக் கொடுத்த மாதிரி மெக்கனிக்கலாக ஆட வேண்டும் என்றால் அதை யார் வேண்டுமானால் செய்ய முடியும் . ஆனால் விசில் போடு பாடலில் நான் ரொம்பவும் ரசித்தது மூன்று பேரும் அவரவர் ஸ்டைடில் ஆடியிருப்பார்கள். பிரபுதேவா அவரது ஸ்டைலில் கொஞ்சம் குறுகி ஆடுவார். அதேபோல பிரசாந்த் அவருடைய ஸ்டைலில் ஆடியிருப்பார். விசில் போடு பாடலில் நான் ரொம்பவும் ரசித்தது மூன்று பேரும் அவர்களின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் ஆடியதுதான்” என்றார்