தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்கில் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கோட் படத்தில் தல:
வெங்கட்பிரபு அஜித்தை வைத்து ஏற்கனவே மங்காத்தா படத்தை இயக்கியவர் என்பதால் படத்தில் அஜித் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருக்குமா? என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. வெங்கட்பிரபும் படத்தில் அஜித் பற்றிய ஒன்று உள்ளது என்று கூறியிருந்தார். படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்யின் மகளாக நடித்துள்ள அப்யுக்தா மணிகண்டன் தல என்ற வசனத்தை கூறுவார். பின்னணியில் மங்காத்தா பிஜிஎம் ஒலிக்கும்.
அந்த காட்சியில் தோனியையும் காட்டியிருப்பார்கள். ஒரே காட்சியில் தல என்ற வார்த்தைக்கு தோனி மற்றும் அஜித்தை காட்டியிருப்பார் வெங்கட்பிரபு. ஆனால், பேட்டி ஒன்றில் அப்யுக்தா மணிகண்டன் அந்த காட்சியில் குறிப்பிட்டுள்ள தல என்ற வார்த்தை தோனியையே குறிப்பிட்டுள்ளதாக கூறினார். அஜித்தை குறிப்பிடவில்லை என்று கூறினார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் யாரோட ஃபேன் நீ என்று தோனி புகைப்படத்தை சி.எஸ்.கே. ட்விட் செய்ததை ரீ ட்விட் செய்திருப்பார்.
தோனியா? அஜித்தா?
தல என்ற வார்த்தை தோனிக்கா? அஜித்திற்கா? என்று அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வெங்கட்பிரபு இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ யாரு ஃபேன் நீ என்று நான் ரீ ரிக்கார்டிங்கே போட்டுவிட்டேன். அப்யுக்தா ஒரு பேட்டியில் கூறியிருந்தது. படப்பிடிப்பில் தல என்ற வார்த்தைத்தான் இருந்தது. பி.ஜி.எம். வராது. அந்த பொண்ணுக்கு ஒன்னும் தெரியல. தல தோனி கிடையாது. தல நமது தல அஜித்தான் என்று தெளிவாக இசை மூலம் சொல்கிறோம்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார். வெங்கட்பிரபுவின் இந்த விளக்கம் மூலமாக தல சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. வெங்கட்பிரபு நடிகர் அஜித்தின் 50வது திரைப்படமான மங்காத்தாவை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் திரை வாழ்விலும், வெங்கட்பிரபு திரை வாழ்விலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.