80 - 90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என மிகவும் பிரபலமான  ஒரு பன்முக கலைஞராக திகழ்ந்தவர் கலைஞானம். அவரின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி பெருமைப்படுத்தும் விதமாக இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் வைரமுத்து, பாக்யராஜ், சிவகுமார், அமீர், ரஜினிகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு கலைஞானத்தைப் பெருமைப்படுத்தினார்கள்.


 



 


இந்த விழாவில் நடிகர் சிவகுமார், கலைஞானம் பற்றியும் அவர் நடிகர் ரஜினிகாந்தை எப்படி சூப்பர் ஸ்டார் ஆக்கினார் என்பது பற்றியும் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.


சாண்டோ சின்னப்பத்தேவர் நான் பணம் தருகிறேன் என சொல்லி கலைஞானத்தை படம் தயாரித்து சம்பாதித்து கொள்ள சொல்லி இருக்கிறார். அந்த சமயத்தில் ரஜினி வில்லனாக நடித்து வந்ததால் அவரை கலைஞானம் ஹீரோவாக போட்டது தேவருக்கு பிடிக்கவில்லை. ரஜினிக்கு அட்வான்ஸ் கொடுத்தது பற்றி சொன்னதும் அப்போ வில்லனா நடிக்க வைக்க சொல்லி அறிவுரை கொடுத்துள்ளார் தேவர். நான் வாக்கு கொடுத்துவிட்டேன் அதனால் அப்படி செய்ய என்னால் முடியாது என கலைஞானம் சொல்லவே தேவர் கலைஞானத்தை திட்டி அனுப்பிவிட்டாராம்.


ரஜினியிடம் கதை சொன்னதும் அவர் வில்லன் கேரக்டருக்காக தான் கலைஞானம் அணுகியுள்ளார் என நினைத்துள்ளார். ஆனால் நீங்க தான் ஹீரோ என சொன்னதும் ரஜினி அதிர்ச்சி அடைந்துள்ளார். சரி இந்த வாய்ப்பை தட்டி கழிக்க வேண்டும் என சம்பளமாக 50 ஆயிரம் கேட்டுள்ளார். கலைஞானம் அதற்கும் சரி என சொல்லி மனைவியின் தாலியை விற்று 30 ஆயிரம் புரட்டி மீதி கடன் வாங்கி ரஜினிக்கு சம்பளம் கொடுத்துள்ளார். அப்படி ரஜினியை ஹீரோவாக அறிமுகபடுத்திய படம் தான் 'பைரவி'. அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் தான் முதன்முதலில் நடிகர் ரஜினிகாந்துக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் போல நடிப்பு ஜாம்பவான்கள் இருக்கையில் ஒரு சின்ன பையனுக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை மிகவும் துணிச்சலாக கொடுத்தார் கலைப்புலி எஸ். தாணு.


 



ரஜினியை ஹீரோவாக போட்டதற்காக கலைஞானம் மீது கோபம் கொண்ட தேவர், பைரவி படத்தை பார்த்துவிட்டு கலைஞானத்தை வரவழைத்து நீ ஜெயிச்சுட்ட என பாராட்டியுள்ளார். அது மட்டும் இல்லாமல் அடுத்த இரண்டு படத்தில் ரஜினியை ஹீரோவாக நடிக்க நீ தான் கால்ஷீட் வாங்கி கொடுக்கணும் என கலைஞானத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார் தேவர். ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டார் ஹீரோவாக்கிய பெருமை கலைஞானத்தையே சேரும். ஆனால் அப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் வேறு ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது.