கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 


மகா சிவராத்திரி 


கடவுள் சிவனுக்குரிய முக்கிய வழிபாடு நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சிவராத்திரியாக கொண்டாடப்பட்டாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. இது மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சிவ பக்தர்கள் முதல் நாளில் ஒருபொழுது உணவருந்தி இரவு கண் விழித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று மறுநாள் காலை நீராடி உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். 


ஈஷாவில் நடைபெற்ற நிகழ்ச்சி 


மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் கோவை ஈஷா யோகா மையத்தில் 30ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. 


ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர். 


பங்கேற்ற பிரபலங்கள்


மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத், பூஜா ஹெக்டே, நடிகர் சந்தானம், பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட்டைச் சேர்ந்த இசைக்  கலைஞர்கள் பிரித்வி கந்தர்வ், ரஞ்சித் பட்டரசர்ஜி என பலரும் கலந்து கொண்டனர். விடிய, விடிய நடைபெற்ற ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பக்தி பரவசத்தில் துள்ளி குதித்து நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.