ட்விட்டர், பேஸ்புக் எங்கும் சமந்தாவின் பெயர்தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. காரணம், பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் . வெளியாவதற்கு முன்பில் இருந்து சமந்தாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டன. சீரிஸுக்கு எதிராகவும் தமிழகத்தில் குரல்கள் கிளம்பின. ட்ரெய்லரில் சமந்தா போராளியாக நடித்து இருப்பதும் அவர் விடுதலை புலிகள் சீருடை போன்ற ஒரு சீருடையை அணிந்திருப்பதும் பெரும் விவாதத்தை கிளப்பின. அதில் இடம்பெற்ற சில வசனங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்ய வேண்டுமென அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கருத்து பதிவிட்டனர். ஆனால் இயக்குநரோ, நாங்கள் தமிழ் மக்கள் மீது மரியாதை வைத்துள்ளோம். படத்தின் பணியாற்றிய பலரும் தமிழர்கள் தான். ட்ரெய்லரை வைத்துக்கொண்டு முடிவெடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக படத்தின் நாயகியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையுமான சமந்தா இது குறித்து வாய்திறக்கவே இல்லை. படம் வெளியாகட்டும் என அவர் காத்திருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஏதேதோ பரபரப்புகளுக்கு இடையே பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் நேற்று இரவே வெளியானது. ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் பேமிலி மேன் 2 இடம்பிடித்தது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவில்லை. ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேமிலி மேன் 2 வெளியானது.
விண்ணிலே பாதையில்லை உன்னை தொட ஏணியில்லை’ மறக்கமுடியாத ஹிட் லிஸ்ட் இதோ!
சென்னையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த வெப் சீரிஸ் மொத்தம் 9 எபிசோட்களாக வெளியாகி உள்ளது. இந்த சீரிசில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்த்துள்ளனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே பேமிலி மேன் வெளியானாலும் தமிழில் வெளியாகவில்லை. ஆனாலும் வெப் சீரிஸ் குறித்து தமிழக ட்விட்டர் பக்கங்கள் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழர்கள் பிரச்னை தொடர்பான விவாதங்களை கவனிப்போம் என்பதைத் தாண்டி சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நடிப்பை சமந்தா கொடுத்திருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக தன் உரிமைக்காகவும், தாய் நிலத்துக்காகவும் சமந்தா பேசும் வசனங்கள் மயிர்க்கூச்செரியும் காட்சிகள் என சிலர் பதிவிட்டுள்ளனர். க்யூட் பெண்ணாக நாம் பார்த்து பழகிய சமந்தா, இந்த சீரிஸில் அதகளம் செய்திருப்பதாகவும், வேறு ஒரு சமந்தாவை இந்த சீரிஸ் கொண்டு வந்து இருப்பதாகவும் கைதட்டுகின்றனர் ட்விட்டர் வாசிகள்.
ட்ரைலரால் ஏற்கெனவே சர்ச்சைக்கு உள்ளான நிலையில் படம் வெளியாகியும் தமிழகத்தில் பெரும் புகைச்சல் ஏதுமில்லை. அதற்கு தமிழில் வெளியாகாதது ஒரு காரணமாக கூறப்பட்டாலும் ட்ரெய்லரில் தெரிந்த கண்ணோட்டம் படத்தில் இல்லையென சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். கலை வளர்க்கும் தமிழ்நாட்டில் கலைக்கு எதிராக குரல் கட்டாயம் எழாது என்பதும், அதேவேளையில் மண்ணும், மக்களும் திரித்து திரையில் வந்தால் கிளம்பும் கண்டனக்குரல்களை யாராலுமே தடுக்க முடியாது என்பதுமே நாடறிந்த நிதர்சனம். பேமிலி மேன் 2 தொடர் தற்போது வெளியாகி வடக்கே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்பதை அறிய சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
சில ட்விட்டர் பதிவுகள்: