எஸ்பிபி என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கு வருவது அவருடைய காந்த குரல் தான். அவர் பாடல்கள் ஒவ்வொன்றும் அத்தகைய சிறப்பான ஒன்று. 1966ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை கிட்டதட்ட 54 ஆண்டுகள் ஒரு மனிதர் திரைப்பட பாடகராக இருந்து வரலாற்று சாதனைப் படைத்தவர். இவர் தனது இளம் வயதில் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்தார். அதன்பின்னர் பாடகராக வாய்ப்பு கிடைத்தவுடன் அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். அவர் மொத்தமாக தமிழ்,தெலுங்கு,இந்தி,மலையாளம்,கன்னடம் என 40ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி அசத்தியுள்ளார்.
அத்துடன் ஒரு ஆண்டில் சராசரியாக 930 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு படத்தில் வரும் அறிமுக பாடலை பாடியுள்ளார். இவை தவிர நடிகராக 76 திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ்,தெலுங்கு,கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். 54 ஆண்டுகால இசை வாழ்க்கையில் 6 முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தெலுங்கில் 3 முறையும், தமிழ்,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளில் தலா ஒரு முறையும் தேசிய விருதை பெற்றுள்ளார்.
ஒருநாளில் 12 மணி நேரத்தில் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்கு 21 பாடல்களை பாடி சாதனைப் படைத்துள்ளார். அதேபோல் தமிழில் ஒரு நாளில் 19 பாடல்களை பாடி சாதனைப் படைத்துள்ளார். மேலும் இந்தியிலும் ஒருநாளில் 16 பாடல்கள் பாடி சாதனை புரிந்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த எஸ்பிபி தனது சினிமா வாழ்க்கையில் இந்தியாவின் இரண்டு பெரும் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். அதாவது இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகிய இருவருடனும் பணியாற்றி பல வெற்றி பாடல்களை அளித்துள்ளார்.
குறிப்பாக இளையராஜா-எஸ்பிபி கூட்டணி ஒரு தனி ரக பாடல்கள் என்றால், ரஹ்மான்-எஸ்பிபி வேறு ஒரு உயர் தர பாடல்களாக அமைந்திருக்கும். எஸ்பிபி குறித்து ஒரு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்,"ஒரு நூற்றாண்டிற்கு ஒரு பாடகர் பிறப்பார். என்னை பொருத்தவர் இந்த நூற்றாண்டிற்கு பிறந்த பாடகர் எஸ்பிபி தான்"எனக் குறிப்பிட்டிருப்பார்.
எஸ்பிபியின் 75 பிறந்தநாளில் இந்த இரண்டு இசையமைப்பாளர்களுடம் அவர் தந்த சில வெற்றி பாடல்களை கேட்போம்.
எஸ்பிபி-இளையராஜா கூட்டணி:
1. அந்தி மழை பொழிகிறது:
இளையராஜா-எஸ்பிபி கூட்டணியில் வந்த முத்தான பாடல்களில் இதுவும் ஒன்று. ராஜபார்வை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.
2. இது ஒரு பொன்மாலை பொழுது:
இளையராஜா-வைரமுத்து-எஸ்பிபி கூட்டணியில் உருவான முதல் பாடல் இது தான். இந்தப் பாடலில் எஸ்பிபியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். நிழல்கள் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றது.
3. பறந்தாலும் விட மாட்டேன்:
எஸ்பிபி-ஜானகி கூட்டணியில் பல பாடல்கள் பெரியளவில் ஹிட் அடித்தவை. அந்த வரிசையில் ஹிட்டான ஒரு வெற்றிப் பாடல் தான் இந்தப் பாடல். குரு படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு கமல் மற்றும் ஶ்ரீதேவி சிறப்பாக நடித்திருப்பார்கள்.
4. கண்மணியே காதல் என்பது:
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஆறுலிருந்து அறுபது வரை திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இதுவும் எஸ்பிபி-ஜானகி கூட்டணி இடம்பெற்ற மற்றொரு வெற்றி பாடல்.
5. காட்டு குயிலு:
தளபதி படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் இருபெரும் ஜாம்பவான் பாடகர்கள் ஒன்று சேர்ந்து இப்பாடலை பாடியிருப்பர்கள். இதற்கு இளையராஜாவின் இசை இன்னும் அழகு சேர்த்திருக்கும்.
இவை தவிர இளையராஜா- எஸ்பிபி கூட்டணியில் வந்த பாடல்களை அடுக்கினால் அந்தப் பட்டியல் முடிய இன்னும் பல நாட்கள் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டணி இந்த இருவர் கூட்டணி.
ஏஆர்.ரஹ்மான்-எஸ்பிபி கூட்டணி:
இளையராஜா-எஸ்பிபி கூட்டணியை போல் இந்த கூட்டணியும் பல சிறப்பான வெற்றி பாடல்களை நமக்கு அளித்துள்ளது. அவற்றில் சில
1. காதல் ரோஜாவே:
ரோஜா திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடல் இந்த வெற்றி கூட்டணியின் தொடக்கமாக அமைந்தது. இந்தப் பாடல் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
2. அஞ்சலி அஞ்சலி:
டூயட் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்படத்தில் அமைந்துள்ள என் காதலே மற்றும் அஞ்சலி அஞ்சலி பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்தது. குறிப்பாக எஸ்பிபி பாடிய பாடல்களில் தனக்கு பிடித்த அஞ்சலி அஞ்சலி தான் என்று ஏஆர் ரஹ்மான் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
3. மின்னலே நீ :
மே மாதம் திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு வெற்றி பாடல் இது. இதில் எஸ்பிபி அந்த உணர்ச்சியை தனது குரலில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
4. காதல் எனும் தேர்வு:
காதலை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம் காதலர் தினம். இத்திரைப்படத்தில் எஸ்பிபி- ரஹ்மான் கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல் இது. எஸ்பிபி மற்றும் ஸ்வர்ணலதாவின் குரலில் அமைந்த சிறப்பான பாடல்களில் இது ஒன்று.
5. தங்கத் தாமரை மகளே:
தமிழில் எஸ்பிபி ஒரு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றார். அந்த விருதை பெற்று தந்த பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இவை தவிர ரஹ்மான்-எஸ்பிபி கூட்டணியிலும் பல பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றை பட்டியலிட ஒரு நாள் அல்ல ஒரு வருடம் கூட போதாது. பல நிலா பாடல்களை பாடி ஹிட் கொடுத்ததால் இவரை பாடும் நிலா பாலு என்றும் பலர் அழைக்க தொடங்கினர். எஸ்பிபி இசையமைத்த சிகரம் திரைப்படத்தில் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல் இருக்கும். அதில் ஒரு வரி இருக்கும்
அதாவது, "விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை"
அந்தவகையில் எஸ்பிபி நம்மைவிட்டு பிரிந்தாலும் அவருடைய பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவர் ஒரு நூற்றாண்டு அல்ல பல நூற்றாண்டு குரலுக்கு சொந்தக்காரர் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது.