சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் 90களில் மிகவும் பிரபலமாக பல தொடர்கள் இருந்தன. 90கள் தொடங்கி எத்தனையோ தொடர்கள் மக்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளியிருந்தாலும் ஒரு சில தொடர்கள் மட்டுமே மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அதில் ஒரு தொடரை ரசிகர்கள் இன்றும் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அது ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்தத் தொடரின் அடுத்த சீசனை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் எனும் தகவல் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 


 



 


இன்ஸ்டாகிராமில் கருத்துக்கணிப்பு :



தமிழ் சின்னத்திரை தொடர்கள் குறித்து கருத்து கணிப்பு ஒன்று இன்ஸ்டாகிராம் மூலம் சமீபத்தில் நடைபெற்றது. சரவணன் மீனாட்சி, சித்தி, கனா காணும் காலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்கள் இந்தக் கருத்துக் கணிப்பில் இடம்பெற்று இருந்தன. இதில் எந்தத் தொடரின் புதிய சீசன் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்ற கருக்கணிப்பு நடைபெற்ற நிலையில், பெரும்பாலானோர் நகைச்சுவைத் தொடரான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அடுத்த சீசன் வரவேண்டும் என்பதற்கு தான் அதிக அளவிலான வாக்குகளை வழங்கியுள்ளனர். 


அதிக வாக்குகள் பெற்ற தொடர் :


இந்த வாக்குகளின் எண்ணிக்கையின்படி நகைச்சுவைத் தொடரான சின்ன பாப்பா பெரிய பாப்பா 44% , குடும்ப தொடர் சித்தி 31 %, மாணவர்களுக்கான தொடரான கனா காணும் காலங்கள் 13 % மற்றும் காதல் தொடர் சரவணன் மீனாட்சி 12 % வாக்குகளும் பெற்றுள்ளன. இதன் மூலம் அதிக அளவிலான ரசிகர்கள் நகைச்சுவைத் தொடரான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அடுத்த சீசன் வரவேண்டும் என்பதற்கே விருப்பம் தெரிவித்துள்ளனர். 


நகைச்சுவைத் தொடர் :


2000ஆம் ஆண்டில் ஒளிபரப்பான ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரை சுகி மூர்த்தி, எஸ்.என். சக்திவேல் மற்றும் எம்.ஏ. மணி எழுதி, இயக்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தத் தொடரின் அடுத்தடுத்த சீசன்களும் வெளியாகின. நடிகைகள் ஸ்ரீப்ரியா, நிரோஷா, கல்பனா, நளினி, சீமா நடிகர் எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, விஜயசாரதி, சாம்ஸ், டெல்லி குமார், மோகன் ராமன், வாசு விக்ரம் உள்ளிட்ட பலர் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.


குறிப்பாக பெரிய பாப்பாவாக  நடித்த நடிகை ஸ்ரீப்ரியா, சின்ன பாப்பாவாக நடித்த நிரோஷாவும் இவர்களைத் தாண்டி பட்டாபி கதாபாத்திரத்தில் நடித்த எம்.எஸ் . பாஸ்கர் என இன்று வரை கொண்டாடப்பட்டு நினைவுகூறப்படுகின்றனர். இந்நிலையில் இந்தக் கருத்துக் கணிப்பை அடுத்து விரைவில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அடுத்த சீசன் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.