கடந்தாண்டு போடப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் முழுமையாக மூடப்பட்டன. இதனால் பல தியேட்டர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாமல் வீட்டுக்கு அனுப்பினர். அதுமட்டுமின்றி பல தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. சில தியேட்டர்கள் மண்டபங்களாக மாற்றப்பட்டன.
பல ஆண்டுகளாக, பாரம்பரியமாக தியேட்டர் நடத்தியவர்கள் கூட ஊரடங்கால் தொழில் நடத்த முடியாமல் தொழிலை நிறுத்திவிட்ட மாற்றுத் தொழிலை தேட துவங்கினர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போது, மீண்டும் தொழில் எழும் என்ற நம்பிக்கை எஞ்சியிருந்த திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்தது. முன்னணி நடிகர்களின் படமான மாஸ்டர், கர்ணன், சுல்தான் போன்றவை தியேட்டர்களுக்கு ரசிகர்களை அழைத்து வரும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பினர். ஆனால் எதிர்பார்த்த அளவு அவை போகவில்லை. மேலும் வெளியான சில வாரங்களிலேயே திரைப்படங்கள் ஓடிடி வசம் சென்றன.
மீண்டும் நிலை திரும்பும் பழைய படி திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை அதிகரித்து தொழில் மீண்டும் மலர்ச்சியடையும் என்று எதிர்பார்த்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு மீண்டும் பேரிடி விழுந்தது. இரவு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததது தமிழக அரசு. அதன் படி திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டும் அனுமதித்து தமிழக அரசு மறு உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இரவு 10 மணிக்கு மேல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் தியேட்டர்களுக்கு மேலும் அது பாதிப்பு. இப்படி பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் எப்படி திரையரங்கை நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். அந்த பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள், 50 சதவீத இருக்கையில் தியேட்டர்களை இயக்குவது கடினம் என்கிற கருத்தை முன்வைத்தனர்.
இந்த பொது முடக்க அறிவிப்புக்கு முன்பே தியேட்டர்களுக்கு வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்த நிலையில், கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நாளில் எப்படி தியேட்டரை நிர்வகிப்பது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் ஓடிடி மோகம் அதிகரித்து வரும் நிலையில் தியேட்டர்களை மூடினால் அது தொழிலை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதால், கடினங்களை கடந்து தியேட்டர்களை இயக்குவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
நெருக்கடியான காலகட்டம் என்றாலும், தொழிலின் நன்மை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள், இந்த சவாலான காலகட்டத்தில் படத்தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பை பெறவும் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பாக இது போன்ற சவாலான சூழல் ஏற்படும் போது சதவீத அடிப்படையில் படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முன்வந்தனர். அதே போல இம்முறையும் பெருநஷ்டம் ஏற்படாத வகையில் சுமூகமான உடன்படிக்கை மூலம் படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.