லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை கோவை காவல்துறை வழங்கி இருக்கிறது. 


கோவை காவல்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “ கோவை காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வை மையப்படுத்தி குறும்பட போட்டி ஒன்று நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் கோவை  மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளிமாணவர்கள் ( 9 ஆம் வகுப்பிற்கு மேல்)  மட்டுமே பங்கேற்க முடியும்.போதை விழிப்புணர்வை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தகுறும்படம்  3 -5 நிமிடங்களுள் இருக்க வேண்டும். 




இந்தப்படத்தை அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் 5 சிறந்த குறும்படங்கள்  நவம்பர் 16 முதல் 18 ஆம் தேதி வரை நடக்கும் ‘Yuva India 2022’ மாநாட்டில் திரையிடப்படும். இந்த மாநாட்டை கோவை மாவட்ட நிர்வாகம், கோவை நகர காவல்துறை மற்றும் கோயம்புத்தூர் நகர மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டெக்ஸிட்டி ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். அதில் முதல் பரிசு வெல்லும் படத்தின் இயக்குநருக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 15,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 


 






மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கார்த்தியுடன் கைதி, நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் மாஸ்டர், நடிகர் கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகிய படங்களில் இணைந்ததன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 67, கார்த்தியுடன் கைதி-2, கமலுடன் விக்ரம்-3 ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளார். இதனால் லோகேஷ் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியுள்ளார்.