தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தி திறம்பட பணியாற்றுவதாக பொதுமக்கள் தரப்பிலும், பல்வேறு துறையினர் தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளார். பதவிக்கு வந்தபோது உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியது முதல், வரலாறு காணாத மழையை பார்த்த சென்னையை மீட்டது வரை திறம்பட செயல்பட்டிருக்கிறார் முதலமைச்சர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களில் முதன்மையானவர் என்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் அறிவித்திருந்தது. தமிழ்நாடு தாண்டியும் பல்வேறு மாநிலத்தவர்களால் போற்றப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆனால், அவர் இந்த இடத்திற்கு வந்ததற்கு பின்னால் நீண்ட பயணம் இருக்கிறது. அவற்றையெல்லாம் கடந்து தான் இப்போது முதலமைச்சராகியிருக்கிறார். இப்படி போராடி சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது வரலாறு. தோனி, சச்சின், மோடி, ஜெயலலிதா போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்ற தகவல்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனிதான் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறியிருக்கும் சமுத்திரக்கனி இந்த வேலைகளை இயக்குநர் போஸ்வெங்கட்டுடன் இணைந்து செய்துகொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். போஸ்வெங்கட் முதலமைச்சரைப் பற்றி சொன்ன விஷயங்கள் ரொம்ப பிரம்மிப்பாக இருந்தது; பல விஷயங்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார். போஸ் வெங்கட் என் 25 ஆண்டுகால நண்பன். நாங்கள் இரண்டு பேரும் அவ்வபோது உட்கார்ந்து பேசும்போது முதலமைச்சர் அவ்வளவு சாதாரணமாகவெல்லாம் இந்த சீட்டுக்கு வந்துவிடவில்லை என்று சொல்லி நிறைய புத்தகங்களைப் படிக்க சொன்னார்.
இப்படி ஒரு போராட்டம், இப்படி ஒரு விஷயங்களை எல்லாம் கடந்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதை பார்க்கும்போது நம் முதலமைச்சர் மீது ஒரு பேரன்பு வந்தது. நான் தான் சொன்னேன். முதல்ல இந்த கதையை ஒரு ட்ராஃப்ட் பண்ணு அதுக்குப் பிறகு மற்ற வேலைகளை பார்க்கலாம் என்று சொன்னேன். முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம். இதை சொல்வதில் எனக்கு சந்தோஷம் தான். அந்த வாய்ப்பு பக்காவாக உருவாகிவிட்டால், அதை உதயநிதியிடம் காண்பித்து படத்தை மேற்கொண்டு உருவாக்கலாம் என்று திட்டமிட்டிருக்கின்றோம். இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்று பெரிய ஆசை. இது நடக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சமுத்திரக்கனி.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி சமீபத்தில் வெளியாகி வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. அந்த வகையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, இப்படத்தில் முதலமைச்சராக நடிக்கப்போவது யார், இயக்கப்போவது யார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்