ஆஸ்கார் விழாவில் கிறிஸ் ராக்கை நடிகர் வில் ஸ்மித் அறைந்தது சர்ச்சைக்குரிய விவாதமாகி வருகிறது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வரும் நிலையில் கமெடியனும் எழுத்தாளருமான டிஃப்பனி ஹடிஷ் அந்த சம்பவத்தை அழகானது என வர்ணித்துள்ளார்.


ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) இரவு அன்று நடந்த விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்கும் போது, ​கிறிஸ் ​ராக் ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் பற்றி கேலி செய்தார்.


“ஜடா, நான் உன்னை நேசிக்கிறேன். ஜிஐ ஜேன் 2 படத்தில், உங்களைப் பார்க்க காத்திருக்க முடியாது”,என்று சிரித்தபடியே நடிகர் கூறினார். கடந்த ஆண்டு அலோபீசியா என்னும் முடி கொட்டும் நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் தனது தலையை மொட்டையடித்துக்கொண்டதாக அறிவித்த பிங்கெட் ஸ்மித், இந்த நகைச்சுவையால் பெரிதும் ஈர்க்கப்படாமல் காணப்பட்டார்.


ஸ்மித் பின்னர் மேடையில் சென்று ராக்கின் முகத்தில் ஓங்கி அறைந்தார். அவரது இருக்கைக்குத் திரும்புவதற்கு முன், "உங்களது தரமற்ற பேச்சிலிருந்து என் மனைவியின் பெயரைத் தவிருங்கள்" என்று கத்தினார்.


இதுகுறித்து பீப்பிள் பத்திரிகைக்கு பேசிய டிஃபனி: “ஒரு கறுப்பின மனிதன் தன் மனைவிக்காக அவரது மரியாதைக்காக எழுந்து நிற்பதை நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது”


"ஒரு பெண்ணாக, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, யாரோ ஒருவர், 'என் மனைவியின் பெயரை குறிப்பிடாமல் இருங்கள், என் மனைவியைத் தனியாக விடுங்கள்' என்று சொன்னால் எப்படி இருக்கும். அதைத்தான் உங்கள் கணவர் செய்ய வேண்டும்.இல்லையா? உங்களைப் பாதுகாக்க வேண்டும்”






மேலும், “அது எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது. அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது நான் பார்த்ததிலேயே மிக அழகான விஷயம். ஏனென்றால் அது இன்னும் ஆண்கள் தங்களோடு இருக்கும் பெண்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் என்று நம்ப செய்கிறது. ”


ஹடிஷ் மேலும், "உங்கள் மனைவிக்காக நீங்கள் அதைச் செய்வீர்களா? 'உங்கள் மனைவியின் பெயரை உங்கள் அம்மாவின் பெயரை மற்றவர்கள் தவறாகக் குறிப்பிடுவதைத் தடுப்பீர்கள் தானே?...' என்று கேள்வி எழுப்பினார்.