2015ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணால கண்ணால’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.


தனி ஒருவன்


ஜெயம், எம் குமரன், உனக்கும் எனக்கும் என தொடர்ச்சியாக ரீமேக் படங்களை இயக்கிய மோகன் ராஜா வேலாயுதம் படத்தைத் தொடர்ந்து திரைக்கதை எழுதி இயக்கிய திரைப்படம் தனி ஒருவன். கடந்த 2015ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் இப்படத்தில் முக்கிய க்கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், ஹிப் ஹாப் தமிழா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.


இமேஜை மாற்றிய மோகன் ராஜா


ரீமேக் ராஜா என்று இணையத்தில் கேலிகளுக்குள்ளான இயக்குநர் மோகன் ராஜா, தன் மீதான் இமேஜை மொத்தமாக மாற்றிய படம் தனி ஒருவன். இந்தப் படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக அமைத்திருந்தார் மோகன். கிட்டத்தட்ட மிக சாதாரணமான ஒரு ஹீரோ - வில்லன் கதையை மிக நேர்த்தியான திரைக்கதை மூலம் விறுவிறுப்பான படமாக உருவக்கினார் மோகன் ராஜா. ரீமேக் மட்டும் இல்லை தன்னால் சொந்தமாக திரைக்கதை எழுதி  நல்லப் படங்களை கொடுக்க முடியும் என்று அனைவருக்கு நிரூபித்தார்.


ஹிட்டான பாடல்கள்


 படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையைக் குறிப்பிடலாம். வில்லனுக்கு என்று தனியாக அவர் அமைத்த ‘தீமைதான் வெல்லும்’ பாடல் சூப்பர் ஹிட் அடித்து வைரலானது. அதே போல் நயன்தாரா மற்றும் ஜெயம் ரவிக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கும் சிறப்பான இசையமைத்திருந்தார் ஆதி. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணால கண்ணால’ பாடல் காதலர்களுக்கான காலர்டியூனாக இருந்து வந்தது.


1 கோடி பார்வையாளர்கள்






தனி ஒருவன் படம் வெளியாகி தற்போது 8 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில் படத்தில் இடம்பெற்ற கண்ணால கண்ணால பாடல் யூடியூவில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்து இயக்குநர் மோகன் ராஜா படத்தில் பணியாற்றிய அனைவருடனும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு தனது வாழ்த்துக்களையும் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.