தங்கர் பச்சான் :
தமிழ் சினிமாவில் அழகி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் தங்கர் பச்சான். நடிகராக இயக்குநராக , ஒளிப்பதிவாளராக , ஓவியராக , தயாரிப்பாளராக தங்கர் பச்சானுக்கு பன்முக திறமை அதிகம். பண்ருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர். திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்.
நாசர் ஜூனியர் :
தங்கர் பச்சான் கல்லூரியில் பயின்ற சமயத்தில் அவருக்கு நடிகர் நாசன் ஜூனியராக இருந்திருக்கிறார். ஒரு வருடம் நாசரும் , தங்கர் பச்சானும் ஒரே கல்லூரியில் பயின்றிருக்கின்றனர். அப்போது ஜூனியராக கல்லூரிக்கு ஜிப்பா உடை அணிந்து வந்த நாசரை , தங்கர் பச்சான் ராகிங் செய்திருக்கிறாராம். பின் நாட்களில் நாசர் மற்றும் தங்கர் பச்சான் இருவரும் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து சிரித்திருக்கிறார்கள். அதேபோல மறைந்த நடிகர் ரகுவரனையும் தங்கர் பச்சான் ராகிங் செய்திருக்கிறார். ஆனால் ரகுவரனும் தங்கர் பச்சானும் ஒரே வகுப்பில்தான் படித்திருக்கின்றனர். இதனை ரகுவரன் வெகு நாட்கள் கழித்துதான் சினிமா பாணியில் அறிந்திருக்கிறார்.இந்த தகவல்களை இயக்குநர் தங்கர் பச்சான் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.
மேகங்கள் கலைகின்றன :
தங்கர் பச்சான் தற்போது மம்தா , பாரதிராஜா , கௌதம் வாசுதேவ் மேனன் , யோகி பாபு நடிப்பில் மேகங்கள் கலைகின்றன என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சென்னை , ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மம்தா இந்த படத்தில் இதுவரையில் இல்லாத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மம்தா கதாபாத்திரத்தின் பெயர் கண்மணியாம் . பல கட்ட நாயகிகளிடம் ஆடிஷன் செய்து இறுதியாக மம்தாவை தேர்வு செய்திருக்கிறார் தங்கர் பச்சான்.