இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி படம் மீண்டும் ரீ-ரிலீசாகவுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


ரீ-ரிலீஸ் காலக்கட்டம் 


பொதுவாக சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் என்னென்ன மொழிகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பே சில மாதங்கள் முன்பு வரை இருந்தது. ஆனால் தற்போது பெரிய அளவில் படங்கள் எதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் பழைய படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 3, மயக்கம் என்ன, மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, திருமலை, கோ, அண்ணாமலை, வாலி, விருமாண்டி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் சக்கைப்போடு போட்டன. 


ஆதரவும் எதிர்ப்பும் 


இத்தகைய ரீ-ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு ஏகோபித்ததாக உள்ளது. காரணம் ஏதோ ஒரு காரணத்தால் தியேட்டரில் பார்க்க முடியாமல் தவறவிட்ட படத்தை மீண்டும் காணும்போது அலாதி இன்பம் அடைகிறார்கள். மேலும் இந்த படங்களை எல்லாம் திரும்ப வெளியிடுங்கள் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக தியேட்டர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் மீண்டும் ஒரு காவியப்படம் ரீ- ரிலீஸாகவுள்ளது. 


அழகி படம் 


தமிழ் சினிமாவில் உணர்வுகளை தத்ரூபமாக எடுக்கக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் தங்கர்பச்சான். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றிய அவர் அழகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தங்கர் பச்சான் தான் எழுதிய கல்வெட்டுகள் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு எடுத்திருந்தார். இப்படத்தில் சண்முகம் என்ற கேரக்டரில் பார்த்திபனும், தனலட்சுமியாக நந்திதா தாஸூம் அந்தந்த கேரக்டர்களுக்காகவே வாழ்ந்திருப்பார்கள். 






மேலும் தேவயானி, மோனிகா, சதீஷ் ஸ்டீபன், விவேக், சாயாஜி ஷிண்டே, பிரமிட் நடராஜன், இளங்கோ குமரவேல், ஜார்ஜ் மரியான், பாண்டு, லூஸ் மோகன்  என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம் பட்டித்தொட்டியெங்கும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் மார்ச் 29 ஆம் தேதி அழகி படம் மீண்டும் வெளியாகவுள்ளது. இதனால் அப்படத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.