நட்சத்திரம் நகர்கிறது படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கும் படம் தங்கலான். தனது திரையுலக வாழ்வில் முதன்முறையாக நடிகர் விக்ரமுடன் இப்படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணி அமைத்துள்ளார்.


நடிகர் விக்ரமின் 61ஆவது படமான இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நிலையில், 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


 






ஆந்திரா, மதுரை என இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து வரும் நிலையில், இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் பாடல் உருவாக்கம் குறித்து ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.


அதில், “ தங்கலான் ஆடியோ உருவாக்கப்பட்டு வரும் விதம் குறித்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்.


இரண்டு பாடல்களை ரெக்கார்டிங் செய்து முடித்துள்ளேன்.இதுவரை நான் இதை முயற்சி செய்திடாத வகையில் ஒரு தனித்துவமான சர்வதேச பழங்குடி ஆடியோவாக பாடல்கள் வந்துள்ளன. நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


 






ஜிவியின் இந்தப் பதிவு ட்விட்டரில் லைக்ஸ் அள்ளி வருகிறது.  ஏற்கெனவே தங்கலான் பட ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் 35 கோடிகள் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் தங்கலான் படம் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. பான் - இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இந்தப்படம்  2டி மற்றும் 3டியில் வெளியாகும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.