ஜனவரி மாதம் 26ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின் பல காரணங்களால் தொடர்ந்து தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.


கோடை ரிலீஸ்?


தேர்தல் காலம் என்பதால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் சினிமா வட்டாரம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முடிந்த பின் ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு தங்கலான் திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மற்றொருபுறம், துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான் திரைப்படமும் தொடர்ந்து தள்ளிப்போய் வரும் நிலையில் நடிகர் விகரம் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று இப்பட போஸ்டர் வெளியாகியுள்ளது.


பார்வதி பிறந்தாளில் போஸ்டர்


தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை பார்வதி (Parvathy Thiruvothu) திருவோத்து இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு பகிர்ந்து வாழ்த்தியுள்ளது. கங்கம்மா எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ள நிலையில், பிறந்த நாள் வாழ்த்துகள் கங்கம்மா என இயக்குநர் பா.ரஞ்சித் பார்வதியை வாழ்த்தியுள்ளார்.


 






நடிகை பார்வதி இன்று தன் 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். மலையாளம், தமிழ், இந்தி என பல மொழிகளிலும் தன் நடிப்பு மற்றும் திறமைக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பார்வதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்வதி, மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருபவர், இறுதியாக தேசிய விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தங்கலான் திரைப்படத்தில் தமிழில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.


தங்கலான் படக்குழு


இதேபோல் சென்ற ஆண்டு நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள ஆரத்தி கதாபாத்திரத்தின் லுக் ஆகஸ்ட் மாதம் அவரது பிறந்தநாளன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது.18ஆம் நூற்றாண்டின் கோலார் தங்க வயல், அங்கு வாழ்ந்த பழங்குடியின தமிழ் மக்கள் என அமைந்துள்ள இப்படத்தின் கதையில், நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் பற்றிய எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளன.


இயக்குநர் பா.ரஞ்சித் உடன் விக்ரம் முதன்முறையாக கைகோர்த்துள்ள நிலையில், சென்ற ஆண்டு வெளியான தங்கலான் டீசர் மிரட்டலாக அமைந்து லைக்ஸ் அள்ளியது. நடிகர் பசுபதி, ஆங்கில நடிகர் டேனியல் கால்டோகிரான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.