தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இயக்குனர் பா. ரஞ்சித். இந்த கலைஞனின் 40வது பிறந்தநாள் இன்று. வழக்கமான சினிமாவாக இல்லாமல், தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது ஒரு சமுதாய பிரச்சினையை மிகவும் துணிச்சலாக படமாக்குவதில் கெட்டிக்கார இயக்குனர்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார். 


 



 


அறிமுகமே அசத்தல் :


அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவரின் முதல் படமே ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற பல அற்புதமான திரைப்படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவரின் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 






 


விக்ரமுடன் கூட்டணி :


அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் இயக்கி வரும் திரைப்படம் 'தங்கலான்'. 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


 







புதிய போஸ்டர் வெளியானது :


18 ஆம் நூற்றாண்டு சார்ந்த திரைப்படம் என்பதால் நடிகர் விக்ரம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினர் ஒகேனக்கல் ஆற்றில் சந்தோஷமாக விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து பா. ரஞ்சித் பிறந்தநாளான இன்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.