தங்கலான்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் இயக்குநர் பா. ரஞ்சித். தற்போது அவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான். சியான் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டோரின் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
ஒரு கோடி ரூபாய் டெபாஸிட்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் படக்குழு மும்மரமாக விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்கலான் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குக்கு படத்தை வெளியிட நிபந்தனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தை வெளியிடுவதற்கு முன் நீதிமன்றத்தில் 1 கோடி ரூபாயை டெபாசிட்டாக கட்ட வேண்டும்.
மேலும் பணம் செலுத்திய பிறகு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் சார்பாக கூறப்பட்டது. சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பலரும் கடன் பெற்றுள்ளனர்.
அவர் உயிரிழந்த பிறகு திவாலானவராகா அறிவிக்கபட்டு அவரின் சொத்துக்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அவரிடம் கடன் பெற்றவர்களிடமிருந்து பணத்தை திரும்பி பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அர்ஜூன்லாலிடம் பணம் வாங்கியவர்களில் ஒருவர் ஸ்டுடியோ கிரீன் பங்குதார்களான ஈஸ்வரன் மற்றும் ஞானவேல் ராஜா. கடந்த 2013ம் ஆண்டு அவர்கள் பெற்ற கடன் தொகையுடன் சேர்த்து வட்டி, வழக்கறிஞர் கட்டணம் என அனைத்தையும் சேர்த்து கட்ட வேண்டும் என வழக்கு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள விக்ரமின் 'தங்கலான்' படத்தை வெளியிடுவதற்கு முன்னர் 1 கோடி ரூபாயை டெபாசிட் பணமாக செலுத்திய பிறகு படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டது. இந்த தொகையை செலுத்தி தங்கலான் படம் சரியான நேரத்தில் வெளியாகுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது.
தங்கலான் ரிலீஸ் அனுமதி வழங்கிய நீதிமன்றம்
தற்போது தங்கலான் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு கோடி ரூபாய் டெபாஸிட் பணத்தை செலுத்திவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தங்கலான் படத்தை நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.