தங்கலான்


பா ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி , உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது . ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தின் இசை வெளியீடு கடந்த ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டு மிக உற்சாகமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசினார்கள். குறிப்பாக நடிகர் விக்ரம் சினிமாவில் ஒரு நடிகராக தான் எதிர்கொண்ட சவால்களை பற்றி பேசியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


தங்கலான் உருவான விதம்


தங்கலான் படம் உருவான விதம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்து வருகிறார். தங்கலான் படத்தின் திரைக்கதையை தான் கபாலி படம் முடித்தபோதே எழுத தொடங்கிவிட்டதாகவும் சார்பட்டா படத்திற்குப் பின் நடிகர் விக்ரம் இணைந்து பணியாற்றலாம் என்று சொன்னபோது அவரிடம் இந்த படத்தின் கதையை சொன்னதாக ரஞ்சித் கூறியுள்ளார்.


கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி மக்களின் கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தை முன்பு புனேவில் அல்லது செஞ்சியில் எடுக்கலாம் என்று நினைத்துள்ளார் ரஞ்சித்.  ஆனால் அந்த நிலத்தோடு தன்னால் ஒன்ற முடியாத காரணத்தில் கே.ஜி.எஃப் சென்று அங்கு இந்த படத்தை எடுத்துள்ளார். தான் நினைத்ததை விட பலமடங்கு சவால் நிறைந்ததாக இப்படம் இருந்ததாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


லைவ் சவுண்ட் 






தங்கலான் படத்தில் 80 சதவீதம் காட்சிகளுக்கு லைவ் சவுண்ட் செய்திருக்கிறார் ரஞ்சித். டப்பிங் ஸ்டுடியோவிற்கு சென்று தனக்கு டப் செய்வது தனக்கு பிடிக்காது என்றும் கமலின் விருமாண்டி படத்தில் லைவ் சவுண்ட் செய்திருந்தது தனக்கு ரொம்ப பிடித்திருந்ததாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புதிய விஷயங்களை கமல் அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் ஒன்று லைவ் சவுண்ட். தற்போது அடுத்த தலைமுறை இயக்குநர்கள் கமல் வழியில் சினிமாவை அணுகுவதை கமல் ரசிகர்கள் ஓரமாக நின்று கைகட்டி ரசித்து வருகிறார்கள்.


மேலும் ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்த படம் குறித்தான தகவலுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.