தங்கலான் இசை வெளியீடு
பா ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்டார்.
நான் சொல்வதை கேட்டு நடிக்காவிட்டால் செட் ஆகாது
சார்பட்டா படம் வெளியான பிறகு விக்ரம் சார் அடுத்த படத்தில் நாம் சேர்ந்து வேலை செய்யலாம் என்று சொன்னார். விக்ரம் சாரை எனக்கு பல விதங்களில் பிடிக்கும். மற்ற கமர்ஷியல் நடிகர்கள் மாதிரி அவர் இருந்ததில்லை. ஐ படத்தில் ஒரு சின்ன காட்சிக்காக ஒருத்தர் இவ்வளவு கடினமாக உழைப்பது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. விக்ரம் சார் என் படத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நான் சொல்வதை கேட்பாரா என்கிற பயம் எனக்கு இருந்தது. ஒரு கலைஞனாக நான் எழுதியதை நான் சொல்வதை ஒரு நடிகர் கேட்டுவிட வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கும் . ஆனால் அவருக்கு சில டிமாண்ட் இருக்கும். அதை என்மேல் வலியுறுத்தினால் என்னால் வேலை செய்ய முடியாது. அவரிடம் எனக்கு கதைகூட சரியாக சொல்ல வரவில்லை. என்னுடைய வார்த்தைகளில் இருந்து ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடியாது. அப்படி நான் பேசியபோது என்னுடைய ஆன்மாவில் இருந்து நான் சொல்ல வந்ததை புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன்.
விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட ரஞ்சித்
விக்ரம் சார் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு தான் எனக்கு மிகப்பெரிய சவால் தொடங்கியது. கலைக்காக தன்னை அர்பணித்த ஒருவரை நான் கையாள்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது என்பது எனக்கு தெரியும். அவரது கதாபாத்திரத்தை முடிந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக கொடுப்பதற்கு நான் முயற்சி செய்தேன். விக்ரம் சாருடன் வேலை செய்தது மூலம் ஒரு கலைஞனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு மாணவனுக்கு நாம் கற்றுக்கொடுக்கலாம். ஆனால் விக்ரம் ஒரு ஆசிரியர். அவரிடம் நான் தான் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தப் படத்தின் போதும் அவருக்கு காயம் ஏற்பட்டு எலும்பு உடைந்துவிட்டது. வலி இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு ஒகே என்று தான் சொல்வார். இந்தப் படத்தில் அவரை ரொம்ப கொடுமை செய்திருக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் சார். இந்த படத்தின் மேல் அவர் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை வெற்றியாக அவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். “ என்று ரஞ்சித் பேசினார்