எஸ்.டி.ஆர் 48

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவிருக்கும் எஸ்.டி.ஆர் 48 படத்தின் மீது பயங்கர எதிர்பார்ப்பு குவிந்து வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை முன்னதாக தயாரிக்க உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதனுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

இப்படத்தில் சிம்பு இரு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் பாகுபலி போன்ற வரலாற்று படமாக இப்படம் இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதனிடையில் கமல் நடித்து வந்த தக் லைஃப் படத்தில் நடிக்க இருந்த துல்கர் சல்மான் படத்தில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எஸ்.டி.ஆர் 48 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இப்படத்தின் பட்ஜெட் அதிகரித்த காரணத்தினால் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை இன்னொரு தயாரிப்பு நிறுவனத்திடம் கைமாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எஸ்..டி ஆர் 48 படத்தின் கலை இயக்குநர் எஸ்.எஸ் மூர்த்தி இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

ராஜமெளலி மற்றும் பன்சாலி சேர்ந்து இயக்கியதுபோல் இருக்கும்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார் எஸ்.எஸ்.மூர்த்தி , இப்படம் இவரது 50 ஆவது படமாகும். தங்கலான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் பேசினார். 

இயக்குநர் ரஞ்சித் மற்றும் தான் இருவரும் ஓவிய கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வதற்கு எளிமையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். தங்கலான் படப்பிடிப்பு முடிந்த பின்பும் அதில் இருந்து வெளிவர தனக்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டதாக மூர்த்தி தெரிவித்துள்ளார்

எஸ்.டி.ஆர் 48 படம் குறித்து பேசியபோது இப்படம் அண்ணன் தம்பிக்கு இடையில் நடக்கும் மோதலை மையப்படுத்தி இப்படம் உருவாக இருப்பதாகவும்  பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலி மற்றும் கங்குபாய் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகிய இருவரும் இணைந்து ஒரு படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி இந்த படம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.