நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தண்டேல் 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யா நடிப்பில் பிப்ரவரி,7-ம் தேதி ‘தண்டேல்’ படம் வெளியானது. இதில் சாய் பல்லவி நடித்திருந்தார். சந்து மொண்டெட்டி இயக்கத்தில் வெளியானது தண்டேல். தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அமரன் படத்தைத் தொடர்ந்து உண்மை சம்பவத்தை மையப்படுத்தி சாய் பல்லவி நடித்துள்ள மற்றொரு படம் தண்டேல். தமிழ் , தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

தண்டேல் படத்தின் கதை என்ன?

ஶ்ரீகாகுளம் என்கிற சிறிய கிராமத்தை சேர்ந்த மீனவர் ராஜூ (நாக சைதன்யா). ராஜூ மற்றும் சத்யா (சாய் பல்லவி) இருவரும் காதலித்து வருகிறார். ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பபவரால ராஜூவின் தொழில் செய்து வருகிறார். ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் கடலில் இருக்கும் ராஜூ. மற்ற கொஞ்ச நாட்களில் காதலியை சந்திப்பது, அவருடன் இருப்பது என்று இருப்பார்.  எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு நிகழ்விற்கு பின் ராஜூவை இனி கடலுக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார் சத்யா. ஆனால் அவள் பேச்சை கேட்காமல் ராஜூ கடலுக்குள் செல்கிறான். கடலுக்குள் சென்ற ராஜூவின் குழு புயலில் மாட்டிக் கொள்கிறது.

பின்னர், பாகிஸ்தான் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் ராஜூவும் அவனது குழுவும் சந்தித்த கொடுமைகள் ஒருப்பக்கம் என்றால்,  இன்னொரு பக்கம் தனது காதலனை பிரிந்து இருக்கும் சத்யா எதிர்கொள்ளும் சவால்கள் என தொடர்கிறது படம். சத்யா மற்றும் ராஜூ இருவரும் சேர்ந்தார்களா என்பதே தண்டேல் படத்தின் கதை. 

தண்டேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல்:

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் சாய் பல்லவியில் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர். 

தண்டேல் ஓ.டி.டி. ரிலீஸ்:

தண்டேல் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மார்ச், 7-ம் தேதி வெளியாகிறது.