நடிகரின் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்கு எல்லாருடைய சப்போர்ட்டும் இருக்கும் என தான் நம்புவதாக நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். 


லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வித்தைக்காரன்”. இப்படத்தில் சதீஷ் ஹீரோவாகவும், சிம்ரன் குப்தா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும் தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா  உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். விபிஆர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் பேசிய சதீஷ், நடிகர் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசினார். அவர் தனது பேச்சின் போது, “இந்த தருணத்தில் தளபதி விஜய் சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் பணத்தின் செக்கை முதன் முதலில் அவரிடம் இருந்து தான் வாங்கினோம். அவர் கட்சி பெயரை அறிவிப்பதற்கு முன்னால் என்னை வர சொல்லியதன் பேரில் சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் “ஏய்..கான்ஜூரிங் கண்ணப்பன் சூப்பர் ஹிட்டுப்பா” என என்னிடம் சொன்னார்.


அது விஜய் சொல்லி கேட்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அப்படத்தை அவர் பார்த்து என்னிடம் பேச நினைச்சது எல்லாம் நான் சினிமாவுக்கு வந்ததற்கான பலன் என நினைத்து கொண்டேன். 


விஜய் ரசிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்பதை நான் நிறைய மேடையில் சொல்லியிருக்கிறேன். கத்தி ஷூட்டிங் நாங்கள் ஹைதரபாத்தில் பண்ணி கொண்டிருந்தோம்.  அப்போது வெங்கி உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என சொன்னேன். அவனுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்று எடுத்து அனுப்பினார். அந்த அளவுக்கு ரசிகர்களை மதிக்கும் பெரிய ஹீரோவை பார்த்தேன் என சதீஷ் கூறினார். 


அப்போது அவரிடம், “விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தில் சேருவீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘எப்படி ஓட்டு போடுவதை வெளியே சொல்லக்கூடாதுன்னு சொல்வார்களோ, அந்த மாதிரி இதையும் சொல்ல முடியாது. ஆனால் எல்லாருடைய சப்போர்ட்டும் அவருக்கு இருக்கும் என நம்புறேன். விஜய்யின் கட்சியில் சேர்ந்து தான் எல்லாம் பண்ன வேண்டும் என்பது இல்லை” என கூறினார். 


தொடர்ந்து சினிமாவில் இருந்து அரசியலில் இருக்கும் விஜய், உதயநிதி ஸ்டாலின் இருவரில் யாருக்கு சப்போர்ட் செய்வீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘உதயநிதி சகோதரர் ரொம்ப நாளா ஒரே போன் நம்பர் தான் வைத்திருக்கிறார். நடிகராக இருக்கும்போது எப்ப கால் பண்ணாலும் பேசுவார்.  இன்னைக்கு அமைச்சராக இருந்தாலும் எப்ப போன் பண்ணாலும் பேசுகிறார். நான் பார்த்ததில் மிகச்சிறந்த நபர் அவர். அந்த தன்மை அவரை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்கும்’ என சொன்னார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 


இதனைப் பார்த்த இணையவாசிகள், விஜய் கட்சியில் சேர்ந்து தான் எல்லாம் பண்ண வேண்டுமா என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி நடிகர் சதீஷின் ஆதரவு விஜய்க்கு தான் என சொல்லாமல் சொல்லியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.