‘வாரிசு’ படத்தில் விஜய் பாடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  


இது குறித்து பிரபல தனியார் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் , “ படங்களில் நடிப்பதுடன் மட்டுமல்லாமல் தனது படங்களில் தொடர்ந்து பாடி வரும் நடிகர் விஜய்  ‘பீஸ்ட்’ படத்தை தொடர்ந்து ‘வாரிசு’ படத்திலும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.  இந்தப்பாடல் படத்தில் இராண்டாவது சிங்கிளாக இடம்பெற்று இருக்கிறது. கலாட்டா நிறைந்த பாடலாக உருவாகியிருக்கும் இந்தப்பாடலும் விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


முன்னதாக, விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான  ‘பீஸ்ட்’ படத்தில்  ‘ஜாலியோ ஜிம்கானா’  பாடலை பாடியிருந்தார். இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப்படத்திலும் பாட முன்வந்திருக்கும் விஜய் பாடல் கேட்ட உடனே ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் படி இருக்குமாறு பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறாராம்.


 






விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


முன்னதாக ‘வாரிசு’ படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி, மக்களின் வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்களின் மனதில் ஒருபக்கம் எதிர்ப்பார்ப்பு இருக்க மறுபக்கம், படம் சுமாராக இருக்குமோ என்ற பயமும் இருந்து வருகிறது. கடந்த முறை பீஸ்ட் படத்திற்கு பில்-அப் கொடுத்து காரியத்தை கெடுத்த படக்குழுவினரை, விஜய் ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல், திட்டி தீர்த்தனர். தமிழ் புத்தாண்டுக்கு கடுப்பான விஜய் ரசிகர்கள், “ தளபதி இல்லாத தீபாவளியே இல்லை. சன் டி.வியில் தீபாவளிக்கு பீஸ்ட் படம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது” என ட்வீட் செய்து அவர்களின் பொங்கி வரும் உணர்வுகளை ஷேர் செய்து வருகின்றனர்.


 


அதே போல, படம் பொங்கலுக்கு வெளியானாலும், படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது என்ற தகவல் பரவி வருகிறது. இதைப்பற்றிய அதிகாரபூர்வ தகவல், அக்டோபர் 20 அல்லது 21 ஆம் தேதி வெளியாகும் எனவும் பேசப்படுகிறது. இவை அனைத்தும், இசையமைப்பாளர் தமனின், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு பின் கிளப்பட்ட தகவல் என்பது குறிப்பிடதக்கது.