லியோ படத்தின் ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசிய கெட்டவார்த்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான எதிர்ப்பு எழுந்ததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


இன்னும் ஒரு வார காலமே உள்ளது. தூக்கம் வராமல் எப்போது அக்டோபர் 19 ஆம் தேதி  ஆகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் “லியோ” படம் வெளியாகவுள்ளது. மாஸ்டர் படத்துக்கு பின் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளதால் இம்முறை சம்பவம் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


லியோ த்ரிஷா,அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. மேலும் இப்படம் LCU  எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம் பெறும் என அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படி நாளுக்கு நாள் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. 



லியோ படத்தின் இதுவரை பல போஸ்டர்கள் வெளியாகி கதை பற்றிய குறிப்புகளை வழங்கி விட்டது. இதேபோல் நான் ரெடி, பேட் தாஸ் ஆகிய 2 பாடல்களும் வெளியாகி யூட்யூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று (அக்டோபர் 11) அன்பெனும் பாடல் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தில் விஜய் பார்த்திபன்/ லியோ தாஸ் என இரண்டு பெயர் கொண்ட கேரக்டரில் நடிக்கிறார். இது இரட்டை வேடமா அல்லது ஒரே ஆள் இரண்டு விதமான தோற்றத்தில் நடிக்கிறாரா என்றெல்லாம் சஸ்பென்ஸ் வைத்துள்ளது படக்குழு. 


இப்படியான நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. வன்முறை தெறிக்கும் காட்சிகளோடு நிறைந்த இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. அதில் ஒரு இடத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருக்கும் காட்சிகள் இடம் பெற்றது. அதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். முன்னணி நடிகர் ஒருவர் இப்படி ஒரு வார்த்தை பேசி ரசிகர்களை தூண்டி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “விஜய் அந்த கெட்டவார்த்தையை பேச தான் கட்டாயப்படுத்தியதாகவும், யாரும் வருத்தப்பட்டிருந்தால் நானே முழு பொறுப்பு” எனவும் தெரிவித்திருந்தார். இதனால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 


இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லரில் இருந்து கெட்ட வார்த்தை பேசும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சீனில் மியூட் செய்யப்பட்டு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் ஒரு பக்கம் பாராட்டுகளும் கிடைத்துள்ளது. மிகப்பெரிய பேமிலி ஆடியன்ஸ் ரசிகர்களை கொண்ட விஜய், இந்த நடவடிக்கையை சற்று முன்னதாகவே எடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.  




மேலும் படிக்க: Watch Video: புவா, ஜோவிதா.. போட்டியாளர்கள் பெயரை மாற்றி மாற்றி சொல்லி பிக்பாஸை கடுப்பேற்றும் விஷ்ணு!