நாம உழைச்சா மட்டும் தான் உயர முடியும் என வியாபாரிகள் சங்க கட்டட திறப்பு விழாவில் நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். 


சென்னை கே.கே.நகரில் வியாபாரிகள் சங்க கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மிகப்பிரமாண்டமாக இந்த விழாவானது நடைபெற்ற நிலையில் இதில் லெஜண்ட் சரவணன் பேசியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. 


அதாவது, “வியாபாரிகள் சங்க கட்டடத்தை திறந்து வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தலைவர் விக்கிரமராஜா தலைமையில் செயல்பட்டு வரும் வியாபாரிகள் சங்கம் தமிழ்நாட்டில் எந்த மூலையிலும் வியாபாரிகளுக்கும் சிறு பிரச்சினை என்றாலும் உடனடியாக சென்று அதற்கு தேவையான உதவிகளை செய்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எந்த நாட்டில் வியாபாரம் செழிப்பாக இருக்கிறதோ அங்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 


இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான ஒன்றாக சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதில் இந்த காக்கா, கழுகு கதைகள், இவருக்கு அந்த பட்டம், அவருக்கு இந்த பட்டம் போன்ற விஷயங்களால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமும் கிடையாது. நாம உழைச்சா மட்டும் தான் உயர முடியும். நாம உயர்ந்தா நம்ம நாடும் உயரும்” என அந்நிகழ்ச்சியில் லெஜண்ட்  சரவணன் பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 


ரஜினி, விஜய்க்கு எதிர்ப்பு 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த இடத்துக்கு அடுத்து யார் வரப்போகிறார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக திரையுலகில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பலருக்கும் அதிருப்தியையே ஏற்படுத்தி வருகிறது. காரணம் நடிகர் விஜய் தான் நிச்சயம் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். இது ரஜினி ரசிகர்களை சற்று கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. 


இப்படியான நிலையில் ஜெயிலர் படம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “காக்கா - கழுகு கதை ஒன்றை விவரித்தார். என்னதான் காக்கா தொல்லை செய்துக் கொண்டிருந்தாலும் கழுகு உயரே உயரே தான் பறக்கும். அதேபோல் தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேற வேண்டும்” என கூறினார். இதில் காக்கா என்ற வார்த்தையை நடிகர் விஜய்யை குறிவைத்து சொல்லப்பட்டதாக இணையத்தில் சர்ச்சை எழுந்தது. 


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லியோ படத்தின் வெற்றி விழாவில், காடு சம்பந்தப்பட்ட கதை ஒன்றை விஜய் சொன்னார். அதில், ‘காக்கா, கழுகு’ என்ற வார்த்தையை பயன்படுத்த அது ரஜினி பேச்சுக்கு பதிலடி கொடுக்கத்தான் பேசப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இப்படியான நிலையில் இருவரின் பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லெஜண்ட் சரவணன் கருத்து அமைந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.