நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஏப்ரல் 30ம் தேதிக்கு முன்பாக வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கனடா நாட்டைச் சேர்ந்த York Cinemas என்ற விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் படம் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது சினிமா கேரியரில் கடைசியாக “ஜனநாயகன்”  என்ற படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், ரெபோ மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தன்னுடைய கட்சி பெயரான “TVK" வை குறிப்பிடும் வண்ணம் இப்படத்தில் தளபதி வெற்றிக் கொண்டான் என்ற கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். ஜனநாயகன் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தழுவல் என தெரிய வந்துள்ளது. 

சென்சார் பிரச்னை

இந்த நிலையில் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பிரச்னையில் சிக்கியது. இந்த படத்தை முதலில் சென்சார் போர்டுக்கு அனுப்பிய நிலையில் படம் பார்த்த அதிகாரிகள் மாற்றங்களை தெரிவிக்க, அதனை சரி செய்து மீண்டும் படக்குழு சான்றிதழ் கேட்டு அணுகிறது. ஆனால் அது தரப்படாமல் இழுத்தடிக்கப்படவே, பட நிறுவனம் ரிலீசுக்கு 4 நாட்கள் முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. 

அதில் சென்சார் போர்டு அதிகாரி ஒருவர் படத்தில் மதத்தை புண்படுத்தும்படி காட்சி இருப்பதாக புகார் அளித்ததால் சான்றிதழ் அளிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தணிக்கைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் அளிக்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கைத்துறை மேல்முறையீடு செய்தது. பட நிறுவனம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. ஆனால் கேவிஎன் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் சென்சார் போர்டு சொன்ன மாற்றங்களை செய்து சமீபத்தில் மீண்டும் தணிக்கை சான்றிதழ் கேட்டு படக்குழு அனுப்பியுள்ளது. அதேசமயம் நீதிமன்றத்தில் வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. 

இதனிடையே ஜனநாயகன் படத்துக்கான உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கேவிஎன் நிறுவனம் தெரிவித்தது. தியேட்டர்களிலும் பல கோடிக்கு டிக்கெட் முன்பதிவும் நடைபெற்ற நிலையில் பணம் அனைத்தும் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. 

படம் வெளியாவதில் உள்ள சிக்கல் 

இதனிடையே ஜனநாயகன் படத்துக்கு அடுத்த வாரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் விதிகளின்படி தேர்தலில் போட்டியிடுபவர்கள் சம்பந்தப்பட்ட விதிகளில் திரைப்படம் மூலம் பரப்புரை செய்யக்கூடாது என்பதும் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே சென்சார் சான்றிதழ் கிடைத்தும் படம் வெளியாகாத சூழல் உருவாகியுள்ளது. 

இதன் காரணமாக தேர்தல் முடிந்து விதிகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளும் வரையில் இந்த படம் ரிலீசாக வாய்ப்பில்லை. இதனை கனடாவை சேர்ந்த யார்க் சினிமாஸ் என்ற நிறுவனம் உறுதிச் செய்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “அன்புள்ள ரசிகர்களே, ஜன நாயகன் திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்பு வெளியாகாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்களிடம் ஏதேனும் முன்பதிவு டிக்கெட்டுகள் நிலுவையில் இருந்து, அதனை கொடுத்து உங்கள் பணத்தைத் திரும்பப் பெற்று செல்லவும். 

புதிய வெளியீட்டு தேதி உறுதிசெய்யப்பட்டவுடன் முன்பதிவு தொடங்கும்.  உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.