தமிழ் திரையுலகின்  உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு இரண்டு படங்களில் மட்டும் நடிப்பேன் என்று விஜய் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.


கோட் அப்டேட்:


அதில் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் தி கோட் படமும் அடங்கும். வித்தியாசமான கதைக்களத்தில் மாறுபட்ட இரண்டு தோற்றத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், கோட் பட ட்ரெயிலர் வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் கோட் படத்தின் ட்ரெயிலர் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.






நாளை மறுநாள் ட்ரெயிலர் ரிலீஸ்?


இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விருந்தாக விஜய் ரசிகர்களுக்கு கோட் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுதந்திர தினத்தில் கோட் படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கோட் படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர்களும், ஸ்டில்களும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கோட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. மூன்று பாடல்களில் மெலோடி பாடல் தவிர மற்ற இரண்டு பாடல்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


பொதுவாக விஜய் படத்தின் பி.ஜி.எம்., பாடல்கள் எப்போதும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஆனால், இந்த முறை சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோட் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை ஏமாற்றாத வகையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


கோட் பட ட்ரெயிலர் சுதந்திர தினத்தில் வெளியாகாவிட்டால் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் நடித்துள்ளார். நடிகை சினேகா, த்ரிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.