சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் நடிகர் விஜய், நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்பொழுது விஜய் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த திடீர் ஆலோசனை தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவசர, அவசரமாக ஆலோசனை கூட்டம்:
முன்னதாக நடைபெற்ற அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் முன் அறிவிப்புடன் நடைபெற்ற நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அவசர அவசரமாக நடைபெறுவதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சில மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாவும், சென்னை கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆணையிடுங்கள் செய்வேன்:
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், அரசியலுக்கு வருவது குறித்து சூசகத் தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பேசியதாக கூறப்படுவதாவது” ரசிகர்கள், நிர்வாகிகள் ஆன நீங்கள் தான் மன்னர்கள், மக்கள் மற்றும் ரசிகர்கள் நினைப்பதை தளபதி நிறைவேற்ற வேண்டும். நீங்கள் ஆணையிடுவதை நான் செய்வேன்” என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கூறியது போல் பூத் வாரியாக அமைப்பை வலுப்படுத்த அறிவுறுத்தல் கொடுத்துள்ளார், என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தது. தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வங்கியது என சமீப காலமாக விஜய் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அரசியல் காய் நகர்த்தும் தளபதி:
இவை அனைத்துமே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினரும், விஜயின் பிறந்தநாளில், உணவு வழங்குதல், அரசு பேருந்தில் இலவச டிக்கெட் வழங்குதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். மேலும் சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இப்படி விஜயின் அடுத்தடுத்த நகர்வுகள் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விஜய் இன்று நடத்திய திடீர் ஆலோசனைக்கூட்டம், வரும் மக்களவை தேர்தலில் நிர்வாகிகளை களம் இறக்குவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல்களும், யூகங்களும் ஒருபுறம் இருக்க, விஜய் அரசியலுக்கு வருவாரா? அல்லது கடைசிவரை போக்கு காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க