Singapore Saloon Review in Tamil: கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன் (Singapore Saloon). வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் விமர்சனத்தை காணலாம்.


படத்தின் கதை


முடி திருத்தும் தொழிலாளியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியிலிருந்து இப்படம் தொடங்கி அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஃபிளாஷ்பேக் வழியாக விவரித்து இதிலிருந்து ஆர்.ஜே பாலாஜி மீண்டாரா? இல்லையா? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் அடிப்படை கதையாகும். 


தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் ஆர்.ஜே.பாலாஜி தனது சிறுவயது முதல் அந்த ஊரில் முடி திருத்தும் தொழிலாளியாக இருக்கும் லாலை தனது ரோல் மாடலாக ஏற்றுக் கொள்கிறார். தான் எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணராக வருவேன் என கனவு கண்டு கொண்டிருக்கிறார். இதற்காக பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சிகை அலங்கார பணியில் அடியெடுத்து வைக்கிறார். அந்த வகையில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான ஜான் விஜய்யிடம் வேலைக்கு செல்கிறார்.


பின்னர் அங்கிருந்து வெளியேறி தனியாக சிங்கப்பூர் சலூன் என்ற பிரமாண்டமான கடையை தொடங்க நினைக்கிறார். இந்த கடை தொடங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவுகிறது. இதனால் விரக்தியடையும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை முடிவுக்கு செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் திட்டமிட்டப்படி சிங்கப்பூர் சலூன் கடை திறக்கப்பட்டதா? ஆர்.ஜே பாலாஜியின் தற்கொலை எண்ணம் தடுக்கப்பட்டதா? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை ஆகும்.


நடிப்பு எப்படி? 


படம் முழுக்க முழுக்க ஆர்.ஜே.பாலாஜி வழியே கடத்தப்படுகிறது. மனிதருக்கு காமெடி கைவந்த கலை என்ற நிலையில், சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஹீரோயின் மீனாட்சி சௌத்ரிக்கு இப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் விஜய்யின் அடுத்தப்பட ஹீரோயின் என்பதால் ரசிக்கலாம். இவர்களை தவிர சத்யராஜ் மற்றும் ரோபோ ஷங்கர் தனது அலப்பறையான நகைச்சுவை நடிப்பை கொடுத்து படத்தை தாங்கி பிடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரை விட அரவிந்த்சாமி கேரக்டர் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. சில காட்சிகளே வந்தாலும் லாலின் கேரக்டர் ரசிக்க வைக்கிறது. 


படம் எப்படி? 


சிங்கப்பூர் சலூன் படத்தின் பலமே முதல் பாதி தான். இதில் காமெடி காட்சிகளை அடுக்கி தியேட்டர்களை மகிழ்ச்சியான ஒரு மனநிலைக்கு மாற்றி விடுவார்கள் என்பது நிச்சயம். ஆனால் இரண்டாம் பாதியின் திரைக்கதை முதல் பாதியில் இருந்து விலகி வேறு பாதைக்கு சென்றாலும், அது கடைசி வரை கதையுடன் ஒட்டவில்லை. ஜெட் வேகத்தில் சென்ற படம் திடீரென சம்பந்தமே இல்லாத காட்சியினால் அதன் பொலிவை இழக்கிறது. இரண்டாம் பாதியில் வலிந்து திணிக்கப்பட்ட சில காட்சிகளை நீக்கியிருந்தால் படம் ரசிக்க வைத்திருக்கும். 


மேலும் எதுவுமே இங்க குலத்தொழில் கிடையாது, Success is not a option..it must  போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றது. பாடல்கள் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சுகுமாரின் ஒளிப்பதிவு தென்மாவட்ட அழகை மெருகூட்டும் வகையிலும், ராவேத் ரியாஸின் பின்னணி இசை சில இடங்களிலும் கவனிக்கவும் வைக்கிறது. சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் என தெரிவிக்கப்பட்டாலும், அவர்களின் வாழ்க்கையை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருந்தால் இந்த சிங்கப்பூர் சலூன் கொண்டாடப்பட்டிருக்கும்..!