Happy Birthday Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது திரைப்பயணம் பற்றி காணலாம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிறந்த ஜோசப் விஜய், தனது 10வது வயதில் தனது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் ஹீரோவான விஜயகாந்தின் சிறுவயது கேரக்டரில் தான் விஜய் நடித்திருந்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சி., இயக்கிய வெற்றி, நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு ஆகிய படங்களில் விஜய் நடித்திருப்பார்.
’இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ முதல் முன்னணி நடிகர் வரை
1992 ஆம் ஆண்டு விஜய் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் வெளியானபோது ’இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என விஜய்யை கழுவி ஊற்றாதவர்கள் இல்லை. தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தாலும், முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படம் அமைய 4 ஆண்டுகள் காத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு விஜய் நடித்த பூவே உனக்காக படம் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்து சில தோல்வி படங்கள், லவ் டுடே போன்ற நடிப்புக்காக பாராட்டைப் பெற்ற திரைப்படங்கள் என விஜய்க்கு வெளியானது.
மீண்டும் 1998 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படம், விஜய் படம் என்றால் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, அவருக்கு பெண் ரசிகைகள் கிடைக்க காரணமாக அமைந்தது. பின்னர் விஜய் கேரியர் துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, திருமலை, கில்லி, சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார்,பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என பல வெற்றிப் படங்களை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொடுத்து தமிழ் சினிமாவின் ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்னும் அளவுக்கு கொண்டாடப்படுகிறார்.
குழந்தைகளின் ஃபேவரைட்
டான்ஸ் புயல் என கொண்டாடப்படும் அளவுக்கு விஜய் நடனத்தில் பின்னுவார். அவரது ஒவ்வொரு படத்திலும் என்ன நடன அசைவுகளை அவர் வெளிப்படுத்துகிறார் என காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம். கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என ஒவ்வொரு படங்களிலும் வயது ஏறுமா? என கேட்கும் அளவுக்கு மிரட்டியிருப்பார். குறிப்பாக வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலில் இடைவிடாது 1.30 நிமிடங்கள் நடனம் ஆடி தியேட்டரை ஆட்டம் காண வைத்திருப்பார்.
இதேபோல் பாடகர் விஜய்யும் ரசிகர்களுக்கு என்றும் பேவரைட் தான். இதுவரை 66 படங்களில் நடித்துள்ள அவர் 35 பாடல்கள் பாடியுள்ளார். தற்போது வெளியாகவுள்ள லியோ படத்திலும் ‘நா ரெடி’ பாடலை பாடியுள்ளார்.
இப்படி தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!