தளபதி விஜய்யின் நடிப்பில் பொங்கலன்று வெளியாகவிருக்கும் படம், வாரிசு. இப்படத்தின் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படத்தையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் விஜய் நடிக்கிறார்.  விஜயின் 67ஆவது படமான இதற்கு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. 


விரைவில் வாரிசு விருந்து:


2023 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘வாரிசு’ . இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா என நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 




தளபதி 67:


வாரிசு படத்தையடுத்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது விஜயின் 67ஆவது படத்திற்காகதான். விக்ரம், கைதி உள்ளிட்ட படங்களின் மூலம் வெற்றி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்த லோகேஷ் கனகராஜ், இப்படத்தை இயக்குகிறார். அது மட்டுமன்றி, விஜயின் 67ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை த்ரிஷா ஜோடி சேரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் வகையில், இப்படம் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யூனிவர்ஸில் ஒரு அங்கமாக உள்ளதாக நடிகர் நரேன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இந்த அத்தனை அம்சங்களையும் இணைக்கும் வகையில் விஜயின் 67ஆவது படம் உள்ளதால், இந்த படத்தின் மேல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 


”கையில் காப்பு..ஒரு வேள இருக்குமோ!”






சென்னை அடையாரு க்ரீன் வேஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் மணிபூர் நீதிபதியின் இல்லத் திருமண விழா நடைப்பெற்றது. இதில், நடிகர் விஜய் வெள்ளை சட்டையுடனும் கையில் பூங்கொத்துமாய் மாஸாக வந்து இறங்கினார். அவர், மண்டபத்திற்கு செல்லும் காட்சி இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவில் விஜய்யின் கையில் காப்பு அணிந்திருந்ததை பலரும் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.  “ஒரு காப்பு தானே இதை ஏன் இவ்வளவு பெருசா பேசுறீங்க?” என பலர் விஷயம் தெரியாமல் முழிக்க, ”அந்த காப்புதான் விஷயமே” என பதில் கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். ஒரு காப்பினால் விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்குவதற்கான காரணம் மாஸ்டர் படம்தான். மாஸ்டர் படத்தில் ஜேடி கதாப்பாத்திரத்தில் நடித்த விஜய், எல்லா காட்சிகளிலும் கையில் காப்புடன் வலம் வருவார். சமீபத்தில் வெளியாகியிருந்த விக்ரம் படத்திலும் நடிகர் கமல் காப்பு போட்டிருப்பார். இது லோகேஷ் கனகராஜ்ஜின் டச் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய்யும் நேற்று நடந்த திருமண விழாவில் கையில் காப்புடன் வந்திருப்பது, பலருக்கும் “ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அப்படியே வந்திருப்பாரோ” என்ற கேள்வியை தூண்டியுள்ளது.